திண்டிவனம் அருகே கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த மாணவியிடம் தகராறில் ஈடுபட்ட இரு போதை ஆசாமிகள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கொணமங்கலம் பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க தனியார் கல்லூரி மாணவி ஒருவர் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அங்குள்ள விவேகானந்தர் தொடக்க பள்ளி அருகே சென்ற போது, கண்ணியம் பகுதியை சேர்ந்த நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக பணிபுரியும் முனுசாமி என்பவரது மகன் விக்கி என்கிற ஞானமூர்த்தி (வயது 22), இவரது நண்பரான திருவள்ளூர் மாவட்டம், நசரத்பேட்டையை சேர்ந்த ஜெகன்நாதன் என்பவரது மகன் யுவராஜ் (வயது 23) ஆகியோர் அந்த கல்லூரி மாணவியின் பின்பக்கமாக தட்டி உள்ளனர்.
இதுகுறித்து மயிலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவர்கள் இருவரையும் விசாரணை செய்தபோது இருவரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இப்பகுதியில் கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளதால் மாவட்ட காவல்துறை உத்தரவின் பேரில் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டு கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.