தமிழ்நாட்டின் 2024-2025ம் ஆண்டுக்கான முதல் பொருளாதார ஆய்வறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழு சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25-யை (Economic Survey of Tamil Nadu 2024-25) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.
பொருளாதார ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிடுவது இதுவே முதல்முறை ஆகும்.
பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்றிருப்பதாவது:-
தமிழ்நாடு நாட்டின் பொருளதார வளர்ச்சி 2024 – 2025ம் ஆண்டில் 8 சதவீதத்திற்கு மேல் இருக்கும். 2021 – 2022முதல் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதம் அல்லது அதற்கு மேல் என்ற அடிப்படையில் நிலையாக உள்ளது. 1 டிரில்லியன் அமெரிக்க பொருளாதாரம் என்ற இலக்கை எட்ட தமிழக அரசின் பொருளதார வளர்ச்சி ஆண்டு தோறும் 12 சதவீதம் என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். 2023 – 2024 ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 27.22 லட்சம் கோடியாக உள்ளது. இதன்படி பொருளாதார வளர்ச்சி 8.23 சதவீதமாக உள்ளது.
மாநிலத்தின் மக்கள் தொகையில் 31.8சதவீதம் உள்ள வடக்கு மண்டலம், GSDP-யில் 36.6சதவீதம் என்ற அதிகபட்ச பங்களிப்பை வழங்குகிறது. 22.8சதவீதம் மக்கள்தொகை கொண்ட மேற்கு மண்டலம் GSDP-யில் 29.6சதவீதம் பங்களிப்பை வழங்குகிறது. 20.5சதவீதம் மக்கள்தொகை பங்கைக் கொண்டுள்ளது.தெற்கு மண்டலம் GSDP க்கு 18.8சதவீதம் அளவில் பங்களிக்கிறது. கிழக்கு மண்டலம், 25.5சதவீதம் மக்கள்தொகையுடன், 15.1சதவீதமாக மிகக் குறைந்த GSDP பங்கைக் கொண்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குப் பிறகு தமிழ்நாட்டில் சேவைத்துறை வலுவான மீட்சியைக் கண்டுள்ளது. அதன்படி, 2021-22 மற்றும் 2023-24 க்கு இடையில்,ரியல் எஸ்டேட் (9.41சதவீதம்), வர்த்தகம், பழுதுபார்ப்பு, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் (7.98சஹதவீதம்) மற்றும் போக்குவரத்து மற்றும் சேமிப்பு (7.67சதவீதம்) ஆகியவற்றின் விரைவான விரிவாக்கத்தால் இந்தத்துறை 7.97சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
2021-22 மற்றும் 2023-24 க்கு இடையில் உற்பத்தித் துறை 8.33சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது கட்டுமானத் துறை 9.03சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.போக்குவரத்து உபகரணங்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், மோட்டார் வாகனங்கள், ரசாயனங்கள் உள்ளிட்ட பல துணைத் துறைகள் இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளது.
தமிழ்நாடு இந்தியாவில் மிக உயர்ந்த தனிநபர் வருமானங்களில் ஒன்றாக இருந்து வருகிறது, இது வலுவான பொருளாதார அடித்தளத்தையும் பன்முகப்படுத்தப்பட்ட தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளையும் பிரதிபலிக்கிறது. 2023-24ம் ஆண்டில், தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.3.15 லட்சமாக இருந்தது.
இதனால் நாட்டின் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இடம்பிடித்தது. மாநிலத்தின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட சற்று அதிகமாக உள்ளது.
மற்ற முக்கிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம், கொள்முதல், சக்தி சமநிலை (PPP)க்கு சரிசெய்யப்படும்போது, அர்ஜென்டினா மற்றும் துருக்கி போன்ற நாடுகளுடன் ஒப்பிடத்தக்கது.
இருப்பினும், மாவட்டங்கள் முழுவதும் ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கின்றன, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் தனிநபர் வருமானத்தில் முன்னணியில் உள்ளன, அதே நேரத்தில் சில தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள் மாநில சராசரியை விட குறைவாகவே உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக அந்த அறிக்கையில் தெரியவந்துள்ளதாவது :-
நடப்பு நிதி ஆண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும்.
வலுவான கொள்கையின் காரணமாக தமிழகத்தில் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் உள்ளது.
தமிழகத்தின் தனி நபர் வருமானம் ரூ.2.78 லட்சமாக அதிகரிக்கும். இது தேசிய சராசரியை விட 1.64 மடங்கு அதிகம்.
கொரோனா காலத்துக்குப் பிறகு தமிழக சேவைத் துறைகள் வேகமாக மீண்டெழுந்தன. என்பது வலியுறுத்தப்பட்டுளளது.
முதலமைச்சர் பதிவு
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில், மக்களுக்கு அரசு வழங்கிய நலத்திட்டங்கள் தொடர்பாக வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழகத்தின் வளர்ச்சியை பட்ஜெட் உறுதி செய்யும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.