பா.ஜ.க.,வுடன் கூட்டணி வேண்டும்… பா.ஜ.க.,வுடன் கூட்டணி வேண்டாம் என கூறும் இரண்டு கோஷ்டிகளிடம் சிக்கிக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி தவிக்கிறார் என புகழேந்தி தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒருங்கிணைப்புக்குழுவைச் சேர்ந்த பெங்களூரூ புகழேந்தி சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உழைக்காமல் பதவிக்கு வந்தவர் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார். இப்போது ஆறு மாதம் கழித்து திடீரென கூட்டணி பற்றிப் பேசலாம் என்று கூறுகிறார். அண்ணாமலை, திடீரென அண்ணன் எடப்பாடி என்கிறார். நேற்று வரை பச்சை துரோகி என்றும், இன்று அண்ணா என்றும் அண்ணாமலை கூறுகிறார். அரசியல்வாதிகளுக்கு தன்மானம் வேண்டும், சுயமரியாதை வேண்டும்.
தைரியம் இருந்தால் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகிய இரண்டு பேரும் எங்கள் தலைவர் பழனிசாமி சொல்லி விட்டார், பிஜேபியுடன் கூட்டணி இல்லை என்று தில்லாக கூறட்டும் பார்க்கலாம். அந்தப் பக்கம் வேலுமணி, தங்கமணி இந்தப் பக்கம் சி.வி.சண்முகம், செல்லூர்ராஜூ, ஜெயக்குமார் என இரு பிரிவாகப் பிரிந்து நிற்கின்றனர்.
இதற்கு நடுவில் மாட்டிக்கொண்டு பழனிசாமி தவித்து வருகிறார். அதனால் தான் கூட்டணி பற்றி முடிவெடுக்க ஆறு மாதம் கால அவகாசம் கேட்கிறார்.
2026ம் ஆண்டு தேர்தலில் அதிமுக காணாமல் போய்விடும். அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நடப்பது கொள்கை ரீதியான தகராறாகும். ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு எந்த காலக்கட்டத்திலும் பிஜேபியுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று கூறிவிட்டுச் சென்றார்.
அவருக்குப் பின் வந்த இவர்கள்தான் தங்கள் வசதிக்கேற்ப அதை மாற்றிக்கொண்டனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தை எடப்பாடி பழனிசாமியால் வாங்க முடியாது. கொடநாடு கொலை மற்றும் கொள்ளையில் தொடர்புடையவர்கள் யார்? என்கிற விசாரணை மிகவும் தாமதமாகப் போய்க் கொண்டிருக்கிறது.
இது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிக்க வேண்டும். அவரிடம் விசாரிக்கவில்லை என்றால் நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு புகழேந்தி கூறினார்.