திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே ஆரம்பித்த உடனேயே டோல்கேட்டை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லட்சுமிபுரம் என்ற பகுதியில், சுங்கச்சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, திண்டுக்கல் – குமுளி நெடுஞ்சாலையில் வத்தலக்குண்டு வழியே நான்கு வழிச்சாலைக்காக சுங்கச்சாவடி அமைக்கும் பணியானது கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. அதற்காக, நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், நான்கு வழிச்சாலையாக மாற்றி சுங்கச்சாவடி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நான்கு வழிச்சாலை எனத் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில், தற்போது வரை இரண்டு வழிச்சாலை மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், லட்சுமிபுரத்தில் சுங்கச்சாவடி ஒன்றை அமைத்து, அது மார்ச் 12 ஆம் தேதி காலை 10 மணி முதல் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நான்கு வழிச்சாலை எனத் தெரிவித்து விட்டு, இருவழிச்சாலைகளின் பணிகள் மட்டுமே முடிந்துள்ளதால், சுங்கச்சாவடியை திறக்கக் கூடாது என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனையும் மீறி சுங்கச்சாவடி திறக்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அங்கு 7 இடங்களில் பணம் வசூலிப்பதற்கான கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு, ஊழியர்களுக்கான அறை மற்றும் கணினிகள் கொண்டு வரப்பட்டு, அவசர அவசரமாக நேற்று காலை 8 மணிக்கே சுங்கச்சாவடி திறக்கப்பட்டது. அதனை அறிந்து ஆத்திரமடைந்த மக்கள், சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டிருந்த கவுன்ட்டர்கள், உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள், விவசாயிகள், பெண்கள் என ஏராளமானோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த திமுகவினரும் சம்பவம் இடத்தில் குவிந்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், தகவலறிந்து வந்த காவல்துறையினர் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய நபர்கள் யார் என்பது குறித்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஏற்கெனவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே இடத்தில் திறக்கப்பட்ட சுங்கசாவடியை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். இதனால், திண்டுக்கல் – வத்தலக்குண்டு சாலையில் சுங்கச்சாவடி இல்லாமல் இருந்தது. ஆனால், அவசர அவசரமாக நேற்று சுங்கச்சாவடி திறக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த மக்கள் அதனையும் அடித்து நொறுக்கினர்.
அதாவது முதல் முறையும் திறக்கப்பட்ட அன்றே அடித்து நொறுக்கினர். இரண்டாவது முறையும் திறக்கப்பட்ட அன்றே அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரு் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.