அ.தி.மு.க.,- பா.ஜ.க., கூட்டணி ஏற்பட சாதகமான சூழலை உருவாக்கும் வகையில் அண்ணாமலையை மத்திய அமைச்சராக்க பா.ஜ.க., முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பா.ஜ.க.,வில் அண்ணாமலை தலைவரான பிறகே கட்சி ஓரளவு வளர்ச்சி பெற்றது. இந்த வளர்ச்சி தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விற்கு கடும் சவால் விடும் வகையில் அமைந்திருந்தது. இந்த நிலையில் அண்ணாமலை மறைந்த அ.தி.மு.க., தலைவர்களை பற்றி விமர்சனம் முன்வைக்க, அதனை அ.தி.மு.க., கடுமையாக எதிர்க்க இரு கட்சிகளுக்கும் இடையே பெரும் பிரச்னை ஏற்பட்டது.
இதனால் கடந்த சட்டசபை தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் இரு கட்சிகளும் தனித்தனி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணியை தி.மு.க., கூட்டணி எளிதில் வீழ்த்தி விட்டது. இதனால் வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க., பா.ஜ.க., இடையே கூட்டணி அமைந்தால் மட்டுமே தி.மு.க.,வை எதிர்கொள்ள முடியும். இல்லாவிட்டால் இரண்டு கட்சிகளின் நிலைமையும் ‘அரோகரா’ என்றாகி விடும் என இரு தரப்பிலும் உள்ள தலைவர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அண்ணாமலையை பா.ஜ.க., தலைவர் பதவியில் இருந்து மாற்றினால் கூட்டணிக்கு தயார் என்று எடப்பாடி தரப்பில் இருந்து தகவல் கசியவிடப்பட்டது. இதனை ஏற்க பா.ஜ.க., தலைமை தயங்கியது. இந்த நிலையில் மகாசிவராத்திரிக்கு சாமி கும்பிட ஈஷாவிற்கு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா இது குறித்து வேலுமணியிடம் பேசியதாகவும் தெரிகிறது.
அதன் பின்னர் அ.தி.மு.க.,- பா.ஜ.க., இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் திட்டுவதை குறைத்துக் கொண்டு கூட்டணி அமைப்பது பற்றி பரிசீலித்து வருகின்றனர். இந்த நிலையில் வேலுமணி இல்ல திருமண வரவேற்பு விழாவிற்கு பங்கேற்க கோவை எடப்பாடி பழனிசாமியுடன், நைனார் நாகேந்திரன் அரைமணி நேரம் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த பேச்சின் போது அ.தி.மு.க.,- பா.ஜ.க., இடையே கூட்டணி அமைய ஏதுவாக அண்ணாமலையை மத்திய அமைச்சராக்குவது அல்லது மத்திய கட்சிப் பதவி கொடுத்து தமிழகத்தில் இருந்து வெளியே கொண்டு செல்ல வேண்டும் என எடப்பாடி வலியுறுத்தியதாக தெரிகிறது. கூட்டணி அமைய உறுதியான வாய்ப்புகள் இருந்தால், இது பற்றி பா.ஜ.க., மேலிடத்தில் தெரிவிப்பதாக நைனார் நாகேந்திரன் எடப்பாடியிடம் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கூட்டணியில் யார்? யாரெல்லாம் இருக்கலாம் என்றும் இரு தரப்பும் ஆலோசித்ததாக தெரியவந்துள்ளது. குறிப்பாக டி.டி.வி., தினகரன் தாங்கள் இன்னும் பா.ஜ.க., கூட்டணியில் தொடர்வதாக தெரிவித்துள்ள நிலையில், இது பற்றியும் பேசியதாகவே தெரியவந்துள்ளது.
இதற்கிடையே தமிழக பா.ஜ.க., தலைவர் பதவிக்கு நைனார் நாகேந்திரன், தமிழிசை சௌந்திரராஜன், வானதி சீனிவாசன் போன்ற பலரும் முட்டி மோதி வருகின்றனர். அ.தி.மு.க.,- பா.ஜ.க., கூட்டணியை முடித்து கொடுத்தததால், (ஆமாம் இரு கட்சிகளும் கூட்டணி வைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது) நைனார் நாகேந்திரனுக்கு இந்த பதவி வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையில் அண்ணாமலை தரப்பும் தற்போது மத்திய அமைச்சர் பதவி வேண்டாம். தான் தமிழக பா.ஜ.க., தலைவர் பதவியில் தொடரவே விரும்புவதாக தங்கள் கட்சி மேலிடத்தில் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது.
அண்ணாமலை இல்லாவிட்டால், தமிழகத்தில் பா.ஜ.க.,வின் வளர்ச்சி மீண்டும் அதலபாதாளத்திற்கு சென்று விடும் எனவும் அண்ணாமலை தரப்பில் இருந்து மத்திய பா.ஜ.க., தலைமைக்கு எடுத்துக்கூறப்பட்டுள்ளது. இனிமேல் கூட்டணிக்கு பாதிப்பு இல்லாத வகையில் அரசியல் நடத்துவதாகவும், அண்ணாமலை தரப்பிலும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கூட்டணிக்கு பாதிப்பு இல்லாமல் இருந்தால்… அண்ணாமலைக்கு தமிழக பா.ஜ.க., தலைவர் பதவி வழங்கப்படும், பாதிப்பு ஏற்படும் என்ற நிலை வந்தால், தலைவர் பதவிக்கு வேறு நபர் நியமிக்கப்படலாம். ஆனால் தற்போதைய நிலையில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அண்ணாமலைக்கு வலுவாக சப்போர்ட் செய்து வருகின்றனர்.
இருப்பினும் என்ன நடக்கும் என்பதெல்லாம் ஓரிரு வாரங்களில் தெரிந்து விடும் என பா.ஜ.க.,வினர் கூறி வருகின்றனர்.