வேட்டவலம் அருகே புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி அய்யப்பன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரி மாநிலம் வாணரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகன் அய்யப்பன் (வயது 38). புதுச்சேரியில் பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வெடிகுண்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
புதுச்சேரி அய்யப்பன் சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். புதுச்சேரி போலீசாரின் கெடுபிடியால் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை அடுத்த நீலந்தாங்கல் ஏரியில் நேற்று காலை ரவுடி அய்யப்பன் வெட்டிக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.
இது குறித்த தகவல் அறிந்த டி.எஸ்.பி. அறிவழகன் மற்றும் வேட்டவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசார் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே இவர் மீது புதுச்சேரியில் பல்வேறு வழக்குகள் இருப்பதால் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
அய்யப்பனுக்கு மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். திருவண்ணாமலையில் புதுச்சேரி ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.