குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
73 வயதான ஜெகதீப் தன்கர் அசெளகரியம் மற்றும் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள இதயவியல் துறைத் தலைவர் ராஜீவ் நரங் தலைமையிலான மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
சிகிச்சைக்குப் பின்னர் ஜெகதீப் தன்கரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து குடியரசுத் துணைத் தலைவரின் உடல்நலன் குறித்து விசாரித்தார். நடப்பாண்டின் இரண்டாம் கட்ட நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், மாநிலங்களவைத் தலைவரான குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.