பீகார் தேர்தல் முடிந்ததும் மத்திய அமைச்சர்களும், பா.ஜ.க., எம்.பி.,க்களும், கட்சித் தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட திட்டமிட்டுள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தல் பா.ஜ.க.,வின் இறுமாப்பிற்கு கடும் வேட்டு வைத்தது. எப்படியும் 400 தொகுதிகளுக்கு மேல் பெறுவோம் என பிரதமர், உள்துறை அமைச்சர் உட்பட பலரும் வீராப்பு பேசி வந்த நிலையில் பா.ஜ.க., நாடு முழுவதும் 250 தொகுதிகளுக்குள் சுருண்டு விட்டது. இந்த தோல்வி பா.ஜ.க., தலைவர்களை உலுக்கி எடுத்து விட்டது. இனி கவனக்குறைவாக இருந்தால் ஆட்சியை இழந்து விடுவோம் என தேர்தல் பணிகளில் முனைப்புக் காட்டத் தொடங்கினர்.
குறிப்பாக இப்போது கூட்டணி ஆட்சி தான் பா.ஜ.க., தலைமையில் அமைந்துள்ளது. இதனைத் தக்க வைக்க பா.ஜ.க., போராடி வருகிறது. இனி வரும் காலங்களில் இந்த சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தனது கட்சி தலைவர்களுக்கு கட்டளையிட்டுள்ளார். இதன் விளைவு அடுத்தடுத்து வந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க., தீவிர முனைப்பு காட்டி போராடியது. இதன் விளைவு அடுத்து நடந்த ஹரியானா, மகாராஷ்டிரா மாநில தேர்தல்களில் பெரும் வெற்றி பெற்றது.
அசைக்கவே முடியாது என நினைத்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால் அரசினை டில்லி தேர்தலில் மிக எளிதாக பா.ஜ.க., வீழ்த்தி விட்டது. இதற்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இணைந்து தேர்தல் பணி செய்ததே காரணம். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பே மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க., எம்.பி.,க்கள், பா.ஜ.க., தலைவர்கள் என பெருங்கூட்டம் டில்லியில் ஏழை மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் சென்று தங்கியது.
அங்குள்ள மக்களை தனித்தனியாக சந்தித்தது. குறைகளை கேட்டது. வாக்காளர்களுடன் நேரடி தொடர்பு வைத்தது. முடிந்த அளவு வாக்காளர்களின் தேவைகளை, அடிப்படை பணிகளை மத்திய அரசின் அதிகாரத்தை வைத்து பூர்த்தி செய்து கொடுத்தது. தேர்தல் களத்திலும் படு தீவிரம் காட்டி பணி செய்தது. இதன் விளைவாக டில்லியை அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து எளிதாக தட்டித் துாக்கியது. கிட்டத்தட்ட ஹரியானா, மகாராஷ்டிரா, டில்லி ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களிலும் ஒரே பார்முலாவைத் தான் பா.ஜ.க., பாலோ பண்ணியது. இதில் அபரிமிதமான வெற்றியையும் பெற்றது.
அடுத்து நான்காவதாக தற்போது பீகாரை குறி வைத்துள்ளது. இன்னும் சில நாட்களில் பீகாரில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக இப்போதே பா.ஜ.க., மத்திய அமைச்சர்கள், தலைவர்கள், எம்.பி.,க்கள் என பலரும் பீகாரில் குடியேற தொடங்கி விட்டனர். டில்லி பாணியிலேயே அத்தனை வாக்காளர்களையும் கவர்ந்து வருகின்றனர்.
பீகாரில் உள்ள 243 தொகுதிகளில் 100ல் பா.ஜ.க., போட்டியிட முடிவு செய்துள்ளது. 95 தொகுதிகளை நிதிஷ்குமார் கட்சிக்கும், மீதம் உள்ள தொகுதிகளை கூட்டணிக்கும் விட்டுக் கொடுக்க திட்டமிட்டுள்ளது. பீகார் தேர்தலிலும் ஆட்சியை பா.ஜ.க., துாக்கி விடும் என கருத்து நிலவுகிறது.
பா.ஜ.க.,வின் அடுத்த குறி தமிழகம் தான். இதனால் தான் கூட்டணி குறித்து ஆறு மாதம் கழித்து பேசுவோம் என அண்ணாமலையும், எடப்பாடியும் பேசி வருகின்றனர். இப்போதே பா.ஜ.க.,- அ.தி.மு.க., கூட்டணி ஏற்பட்டாலும், தங்களுக்குள் கருத்து வேறுபாடு இன்னும் நீடிப்பது போல் அண்ணாமலையும், எடப்பாடியும் நாடகம் நடத்தி வருகின்றனர்.
பீகார் தேர்தல் முடிந்ததும் பா.ஜ.க., மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள், தலைவர்கள் என பலரும் தமிழகத்தில் குடியேறத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என்னென்ன? அங்கு யாரை வேட்பாளராக நிறுத்தலாம்? அந்த வேட்பாளரின் பின்னணி என்ன? அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு என்ன?
அவரை நிறுத்தினால் உறுதியாக வெற்றி பெறுவாரா? என பல விதங்களில் பா.ஜ.க., சர்வே எடுத்து வருகிறது. வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே பா.ஜ.க.,- அ.தி.மு.க., கூட்டணியில் சீட் கிடைக்கும் என்ற நிலையும் உருவாகி உள்ளது. ஆக மொத்தத்தில் விரைவில் தமிழகத்தில் தேர்தல் களை கட்டும் என்பது மட்டும் உறுதியாகி விட்டது.