நடிகை ரன்யா ராவின் தங்க கடத்தல் வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்த நிலையில், அந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், சிக்கமகளூரைச் சேர்ந்தவர் ரன்யா ராவ்(34) நடிகை. கன்னடத்தில் இரண்டு, தமிழில் ஒரு படம் நடித்துள்ளார். கர்நாடக போலீஸ் குடியிருப்பு மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சிக் கழக ஏ.டி.ஜி.பி., ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள். இவர், கடந்த 3ம் தேதி துபாயில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில், 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான 14.80 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்தார்.
அவரை, விமான நிலையத்தில், டெல்லி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இவர், தொடையில் தங்கக் கட்டிகளை ஒட்டி கடத்தியதும் அம்பலமானது. அவரிடம் இருந்து மொத்தம் 17.29 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நடிகை ரன்யா ராவுக்கு தேச விரோத சக்திகளுடன் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணையை சி.பி.ஐ., அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். சி.பி.ஐ., அதிகாரிகள் குழு மும்பை மற்றும் பெங்களூரு விமான நிலையத்தில் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.