இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் அறிமுகமாகவுள்ளன.
பெட்ரோல் தேவையில்லை; டீசல் தேவையில்லை; அவ்வளவு ஏன் இனி மின்சாரம் கூட தேவையில்லை… ஆனாலும் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகம் வரை புயல் போல சீறிப்பாயும் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்கள் அறிமுகமாகவுள்ளன. உலகில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் மட்டும்தான் இயக்கப்படுகின்றன.
இந்த வரிசையில் 5வது நாடாக இணைந்துள்ள இந்தியா, தனது முதல் சேவையை இந்த மாதம் தொடங்கவுள்ளது. இந்த பெருமையில் தமிழ்நாடும் இடம் பெற்றுள்ளது. காரணம், முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை சென்னையை தளமாகக் கொண்ட ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையான ஐ.சி.எஃப் தயாரிக்கிறது.
சென்னை ஐசிஎஃப் உருவாக்கிய ஆயிரத்து 200 குதிரைத்திறன் கொண்ட முதல் ஹைட்ரஜன் ரயில் வடக்கு ரயில்வேயின் டெல்லி பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 89 கிலோ மீட்டர் நீளமுள்ள ஜிந்த் – சோனிபட் பிரிவில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹரியானாவின் ஜிந்த் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம், ரயிலுக்கு தேவையான எரிபொருளை வழங்கும். இங்கு 3,000 கிலோ ஹைட்ரஜனை சேமித்து வைக்க முடியும். இங்குள்ள ஹைட்ரஜன் கம்ப்ரஸர் மற்றும் டிஸ்பென்சர்கள் மூலம் ரயிலில் ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
டீசலில் இருந்து மின்சார ரயில் என்ஜின்களுக்கு மாறியதைத் தொடர்ந்து, இந்திய ரயில்வே, இப்போது ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் சேவையை நோக்கிய புதிய சகாப்தத்தில் நுழைகிறது. இது, சுத்தமான எரிசக்தி ஆதரமான பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்குகளை ஆதரிக்கும் பசுமை போக்குவரத்து தொழில்நுட்பத்தின் திசையை நோக்கிய புதிய பயணமாகும்.
பெரும்பாலான நாடுகள் 500 முதல் 600 குதிரைத்திறன் வரையிலான திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில்களை உருவாக்கியிருந்தாலும், இந்தியா ஆயிரத்து 200 குதிரைத்திறன் கொண்ட என்ஜினை உருவாக்கி, ரயில்வே உலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை உருவாக்க 80 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப்படுகிறது. 2023-2024ம் நிதியாண்டில் ரயில்வே அமைச்சகம் 35 ஹைட்ரஜன் எரிபொருள் அடிப்படையிலான ரயில்களை உருவாக்க 2 ஆயிரத்து 800 கோடி ரூபாயை ஒதுக்கியது.