திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே வடுவன்குடிசை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் பெரணமல்லூர் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். நந்தினிக்கு திருமணமாகி கணவருடன் ஆரணியில் வசித்து வருகிறார்.
நந்தினி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். ஆகவே சில நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டுக்கு வந்து தாயுடன் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நந்தினி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர் நந்தினி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கத் தாலியை பறித்துள்ளார்.
உடனே அதிர்ச்சியடைந்து சுதாரித்துக்கொண்ட நந்தினி, தாலியை தனது கையால் பிடித்து இழுத்துள்ளார். அப்போது சுமார் இரண்டு பவுன் எடை கொண்ட தங்கத் தாலியை மர்ம நபர் பறித்துச் சென்றார்.
நந்தினியின் பெற்றோர் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் முகமூடி அணிந்த மர்ம நபர், வெளியே காத்திருந்த மற்றொரு கொள்ளையனுடன் இருசக்கர வாகனத்தில் தப்பியோடினர்.
இதுகுறித்து பெரணமல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் முகமூடி கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.