விருத்தாசலத்தில் நள்ளிரவில் பூட்டியிருந்த வீடுகளின் பூட்டை உடைத்து 37 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பூதாமூர் திருவள்ளுவர் தெருவில் வசித்து வரும் சக்திவேல் (42) என்.எல்.சி. இரண்டாவது சுரங்கத்தில் தனியார் நிறுவனத்தில் காசாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர் சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 26ஆம் தேதி விருத்தாசலம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களுக்கும், இவரது மனைவி அருணா அருகில் உள்ள ஏனாதிமேடு சிவன் கோவிலுக்கும் சென்றிருந்தனர்.
இரவு 1:50 மணிக்கு சக்திவேல் வீடு திரும்பிய நிலையில் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்தபோது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 30 பவுன் தங்க நகை, 1 கிலோ வெள்ளி மற்றும் 2 லட்சம் ரொக்க பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதேபோல் அதே தெருவில் வசித்து வரும் சங்கர் மகன் திவாகர் (22), தனியார் மருத்துவமனை ஊழியர். இவரது தாய் சுமதி (44), கட்டிட மேஸ்திரி.
இவர்கள் இருவரும் இரவு வீட்டை பூட்டிவிட்டு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சிவராத்திரி விழாவிற்கு சென்றிருந்தனர். அதிகாலை 3 மணிக்கு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது, பூஜை அறையில் இருந்த பெட்டியை தூக்கிச் சென்று, அருகிலிருந்த பூங்காவில் வைத்து உடைத்து, அதிலிருந்து 7 பவுன் தங்க நகையும், 90 ஆயிரம் ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதேபோல் அடுத்தடுத்த இருவரது வீடுகளையும் உடைக்க முயற்சித்தபோது, வீட்டிலிருந்தவர் கூச்சலிட்டதால் மர்ம நபர்கள் தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.