இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழக காவல்துறை சிறந்து விளங்குகிறது என்று ஆதமங்கலம்புதூர் காவல் நிலைய திறப்பு விழாவில் அமைச்சர் எ.வ. வேலு கூறினார்.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு கூறினார்
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டத்திற்குட்பட்ட ஆதமங்கலம்புதூர் காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் சிறப்புரையாற்றியதாவது :-
வள்ளுவர் பெருந்தகை, `இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பான் உடம்பு’ – என்ற குறளில் தன்னை சார்ந்துள்ள குடிகளுக்கு துன்பம் வராமல் தடுத்து தொடர்ந்து அக்குடிகளை காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தை தாங்கி கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான் என குறிப்பிடுகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு துன்பங்கள் நேரிட கூடாது என்ற நோக்கத்தில் 24 மணி நேரமும் விழித்துக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சருக்காக குறிப்பிடப்பட்ட குறளாக எண்ணுகிறேன்.
காவல் துறை என்பது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கின்ற மற்றும் பலருக்கு உதவுகின்ற முக்கியமான துறைகளில் ஒன்று. என்னை பாதுகாப்பதும் கூட காவல்துறையாக தான் இருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சட்டம் ஒழுங்கு பேணி பாதுகாப்பதற்கு என்று 1309 காவல் நிலையங்கள், ரயில்வே காவல் நிலையங்கள் 47 உள்ளன. முதன் முதலாக மகளிரை காவலர்களாக உருவாக்கிய பெருமையும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞருக்கு தான் உண்டு.
241 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 280 போக்குவரத்து காவல் நிலையங்கள் என மொத்தம் தமிழ்நாட்டுல் 1877 காவல் நிலையங்கள் சட்ட ஒழுங்கு பாதுகாப்பதிலே சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது.
11 காவல்துறை தலைமை இயக்குனர், 22 கூடுதல் காவல் துறை தலைமை இயக்குனர், 44 காவல்துறை தலைவர் 33 காவல்துறையினுடைய துணைத்தலைவர், 173 காவல் கண்காணிப்பாளர்கள், 10 தளவாய் கூடுதல் காவல் நிலையம், 22 கூடுதல் கண்காணிப்பாளர்கள்,
காவல்துறை கண்காணிப்பாளர்கள் 978, துணை தளவாய் என்ற அடிப்படையில் 16 அலுவலர்களும், 54 உதவி தளவாய், 3367 காவல் ஆய்வாளர், 11355 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் இதர காவலர்கள் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 624 பேரும் என மொத்தமாக காவல்துறையில் தமிழ்நாட்டிலே ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 892 காவலர்கள் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் தான் தமிழ்நாட்டு முதலமைச்சர் 2024 – 25 நிதியாண்டில் 12,543 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் மற்ற மாநிலங்களைக்காட்டிலும் தமிழக காவல் துறை சிறந்து விளங்குகிறது.
சட்டமன்ற உறுப்பினர் என்னிடத்திலே மனுவை கொடுத்த காரணத்தினால் தான், தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறை மானிய கோரிக்கையின் போது ஆதமங்கலம்புதூர் காவல்நிலையம் உருவாக்கப்படும் என அறிவித்தார்.
நமது திருவண்ணாமலை மாவட்டம் ஆன்மிக தளமாக இருந்தாலும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது. அந்தவகையில் நமது மாவட்டத்தில் 39 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 7 மகளிர் காவல் நிலையங்கள், 1 குற்றப்பிரிவு காவல் நிலையம், 3 போக்குவரத்து காவல் நிலையங்கள், 4 மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை காவல் நிலையங்கள் என மொத்தம் 54 காவல் நிலையங்கள் உள்ளன. 24.8.2023 அன்று புதியதாக 55-வது காவல் நிலையமாக கிரிவலப்பாதையில் புதிய சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின் படி திறந்து வைக்கப்பட்டது.
காவல் நிலையம் அதிகமாகும் பொழுது சட்டம் ஒழுங்கு பேணிக்காக்கப்படுகிறது மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். 5.7.1967ல் காவல்துறை மானியத்தில், காவல்துறை சிறப்பாக இருக்கவேண்டும் என்றால், திறமையாக செயல்பட வேண்டும். போதுமான அளவிற்கு வசதிகள் செய்து தரப்படவேண்டும். சுதந்திரமான செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டார்.
இன்று திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் பணி ஓய்வு பெற்ற நீதி அரசர் செல்வம் தலைமையில் காவல் ஆணையம் அமைத்துள்ளார். கொரோனா காலத்தில் காவல்துறை தான் மிகச் சிறப்பாக செயல்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறையில் சிறப்பாக பல்வேறு பணிகளை செயலாற்றி கொண்டிருக்கிறார்.
இவ்வாறு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், காவல்துணை கண்காணிப்பாளர் மனோகரன், கலசபாக்கம் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.