முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளையொட்டி சென்னையில் அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை குறிப்பிடும் விதமாக 77 கிலோ கேக் வெட்டி கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எடப்பாடி பழனிசாமி, மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, பெண்களுக்கு ஊட்டச்சத்து பையை வழங்கினார்.
ஈரோட்டில் செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அலுவலகத்தில் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அதிமுகவினருக்கு இனிப்பு வழங்கினார். அப்போது ஆடும், ஓநாயும் ஒன்று சேர முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு செங்கோட்டையன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
ஓபிஎஸ்
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார்.
அப்போது ஒற்றைத் தலைமை காரணமாகவே அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டினார். அதிமுக ஒன்று சேரவில்லை என்றால் அதிமுகவே இல்லை என்றார்.