தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக முதல்வராக பதவி ஏற்பது உறுதி என்று ஒட்டன்சத்திரத்தில் நடந்த தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகர செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை ஏற்றுப் பேசினார். தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கூறியதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி சொல்லாத வாக்குறுதிகளை நிறைவேற்றி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் 234 சட்ட மன்ற தொகுதிகளில் 5 இடங்களில் மட்டுமே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு அரசின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. அதில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 2 இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது.
ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் ரூ.ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கிராமங்களுக்கும் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.
தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்த வரும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 வது முறையாக முதல் அமைச்சராக பதவி ஏற்பது உறுதி என்பதால் அதற்காக தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டப்பணிகளின் சாதனைகளை மக்கள் முன் கொண்டு சென்று இப்போது இருந்தே தேர்தல் பணியை தீவிரமாக ஈடுபடவேண்டும்.
வருகின்ற மார்ச் 1 ஆம் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து ஊர்களிலும் திமுக கொடியேற்றி வைத்து, விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு, பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்னதானம் வழங்குவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடவேண்டும்.
இவ்வாறு அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.
கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் பரணி கே.மணி, மாவட்ட அவைத்தலைவர் மோகன், நகராட்சி தலைவர் திருமலைசாமி, திமுக ஒன்றிய செயலாளர்கள் ஜோதிஸ்வரன், எஸ்.ஆர்.கே.பாலூ மற்றும் வார்டு செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள். இளைஞர்அணி மாவட்ட துணை அமைப்பாளர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.