வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஆர். வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் சம்பந்த மூர்த்தி (வயது 80), ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் குடும்பத்துடன் விவசாயம் செய்து வருகிறார். மேலும் பசு மாடுகளும் வளர்த்து வருகிறார்.
இவர், பசு மாடுகளுக்காக 150 வைக்கோல் கட்டுகளை தலா ரூ. 250 வீதம் வாங்கி, வீட்டின் அருகே விவசாய நிலத்தில் உள்ள மாட்டுக் கொட்டாயில் வைத்துள்ளார்.
இந்த நிலையில், வைக்கோல் கட்டுகள் வைத்துள்ள இடத்தின் மேல் பகுதியில் மின்சார கம்பி உரசி திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து, குடியாத்தம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் அந்தப் பகுதியில் உள்ள சிறுவர்கள் வைக்கோல் கட்டுகளை தீயில் இருந்து காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்கு உருட்டி சென்றனர். ஆனாலும் அதற்குள் ஏராளமான வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. திடீரென மின்கம்பி உரசி வைக்கோல் கட்டுகள் தீப்பற்றி எரிந்த சம்பவம் கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.