பாறைக் கீறல்கள் கண்டுபிடிப்பு.
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் ச.பாலமுருகன், சி.பழனிசாமி, மதன்மோகன், தண்டராம்பட்டு ஸ்ரீதர், சிற்றிங்கூர் ராஜா, தொண்டமானூர் கார்த்திக், ஆகியோர்கள் மேற்கொண்ட ஆய்வில் தொண்டமானூர் மலைப்பகுதியில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த சுமார் 5000 ஆண்டுகள் பழமையான பாறைக் கீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தொண்டமானூர் வழியாக ஓடும் தென்பெண்ணையாற்றை ஒட்டி பலகுன்றுகள் உள்ளன. இக்குன்றுகளில் உள்ள குகைத்தளங்களை இங்குள்ள மக்கள் வழக்கு சொல்லில் பொடவு என்று அழைக்கின்றன. இந்த பொடவுகளில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாறைகீறல்கள் உள்ளன. இந்த பாறைக்கீறல்களின் அமைப்பு மற்றும் வடிவத்தைப் குறித்து தொல்லியல் ஆய்வாளர் காந்தி ராஜன் கூறியதாவது,
வவ்வால் பொடவு என்ற இடத்தில் உள்ள பாறையின் தென்புற சரிவில் சுமார் 10 அடி அகலமும் 10 அடி நீளமும் உள்ள பாறையில் பல கோட்டுருவங்கள் காணப்படுகின்றன. இந்த கோட்டுருவங்கள் பல நீண்ட கோடுகளும், வளைவுகளும் காணப்படுகின்றன. இதில் மனித உருவம் ஒன்று கை வீசி கையில் ஆயுதங்கள் ஏதுமின்றி நடந்து வருவது போல காட்டப்பட்டுள்ளது. இவ்வுருவத்தின் இடது கையருகே நீண்ட மரக்குச்சி / தடி போல உள்ளது அதன் அடிப்பக்கத்தில் அம்பு போன்ற முனை காட்டப்பட்டுள்ளது. இவ்வுருவத்தின் கால்கள் அருகே இரண்டு ஆழமான குழிகள் குடையப்பட்டுள்ளன. இவை cup marks வகையைச் சேர்ந்தவையாகும். இதனருகே இரண்டு கோடுகள் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வுருவங்களுக்கு மேல்புறம் மனித உருவம் ஒன்று இரண்டு முக்கோணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதனருகே ஆங்காங்கே சில வரைவுகள் காணப்படுகின்றது.
மற்றொரு உருவம், மனித உருவத்திற்கு அருகே நீண்ட கோடுகளும் ஆங்காங்கே குறுக்கு கோடுகளும் காணப்படுகின்றது. இக்கோடுகள் ஆழமாகவும் நேர்த்தியான வடிவமைப்பும் கொண்டவையாக உள்ளது.
மற்றொரு பாறைத் தொகுதியில் கோடுகள் நேராகவும் குறுக்கு கோடுகளாகவும் தொடர்ச்சியாக நெருக்கமாக செதுக்கப்ப்பட்டுள்ளது. இதன் பொதுத் தோற்றம் சரியாக அடையாளம் காண இயல வில்லை. அதே சமயம் படகு போன்ற தோற்றம் ஒரு கோணத்தில் தெரிகின்றது. இத் தொகுதியில், எண்ணற்ற வரைவுகள் காணப்படுகின்றன. அவற்றில், வடிவியல் கோட்ப்பாட்டுடன் உள்ள வடிவங்களும், குறியீடுகள் போன்ற வடிவத்தை உடைய வரைவுகளும் காணப்படுகின்றன. இவற்றில் சில உருவங்கள் மனித உருவத்தை காட்டியிருப்பதைப் போல அமைந்துள்ளது. இதில் கொம்புகள், வால் ஆகியவை கொண்ட மான் அல்லது மாடு போன்ற உருவம் ஒன்று தெளிவாக அமைந்துள்ளது. இதே ஊரில் மற்றொரு இடத்தில் உள்ள அய்யர் பொடவு என்ற இடத்தில் உள்ள பாறைக்கீறல்கள் சதுரம், நீள்செவ்வக, மற்றும் முக்கோண வடிவங்கள் காணப்பபடுகின்றன.
இங்குள்ள கற்செதுக்குகள் அல்லது பாறைக்கீறல்கள் தமிழகத்தில் ஏற்கனவே கண்டறியப்பட்ட பெருமுக்கல் (விழுப்புரம்) ஏற்பெட்டு (நீலகிரி) மற்றும் கேரளாவில் உள்ள எடக்கல் கற்செதுக்குகளுக்கு நிகராக இந்த கல் செதுக்கு ஓவியங்கள் காணப்படுகின்றது. இந்த கல் செதுக்கு ஓவியங்கள் புதிய கற்காலத்தின் இறுதிப்பகுதியில் இவற்றை செதுக்கி இருக்க வாய்ப்புக்கள் உண்டு. இவை சுமார் 3000 முதல் 5000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கிடைத்த இந்த பாறைக்கீறல்கள் மூலம் தண்டராம்பட்டு பகுதியில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது. மேலும் இவ்வூரில் நாகக்கல் பாறைகீறல், புதிய கற்காலக் கருவி, குத்துக்கல், பெருங்கற்கால கற்பதுக்கைகள், நடுகற்கள், தமிழ், தெலுங்கு, கிரந்த கல்வெட்டுகள், பல்லவர் கால கொற்றவை ஆகியனவும் முக்கியத்துவம் பெற்றதாகும். இவ்வளவு சிறிய கிராமத்தில் கிடைத்துள்ள இந்த அரிய தொல்லியல் பொக்கிஷத்தை அரசு பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் கோருகின்றனர்.
