திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பௌர்ணமி மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் ரயில்களை கூடுதல் நேரம் நிறுத்த வேண்டும். கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும். கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும், என ஆந்திரா தெலுங்கானா பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலை ஒட்டியுள்ள 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.
அப்படி தை மாதம் தைப்பூச பௌர்ணமி தினமான நேற்று முன்தினம் இரவு ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
சாமி தரிசனம் மற்றும் கிரிவலத்தை முடித்துக் கொண்டு மீண்டும் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்காக விழுப்புரத்தில் இருந்து காட்பாடி மார்க்கமாக திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்காக ஆன்மிக பக்தர்கள் நேற்று அதிகாலையிலேயே திருவண்ணாமலை ரயில் நிலையம் வந்தனர்.
ரயில் வந்ததும் இடம் பிடிப்பதற்காக ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறினர். ரயிலில் இருந்து இறங்குபவர்களுக்கு கூட வழி விடாமல் ஏறினர்.
நிலைமையை அறிந்த ரயில்வே போலீசார் ரயிலில் இருந்து இறங்குபவர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து இறக்கி விட்டனர். இந்த நிலையில் ரயிலில் உறவினர்கள் ஏறியது அறியாமல் ஒரு சிலர் மீண்டும் ரயிலில் இருந்து கீழே இறங்கி ரயில் கிளம்பும் நேரத்தில் ஓடும் ரயிலில் பெண்கள் குழந்தைகள் என ஏறியது அங்கு இருந்தவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.
ரயில்வே போலீசார் அவர்களுக்கு உதவி செய்து மீண்டும் ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
வரும் காலங்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து, கூடுதல் நேரம் ரயில் நிற்பதற்கு அவகாசம் வழங்க வேண்டும். கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள், ஆன்மிக பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ப ட ம் உ ண் டு * * *
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆந்திரா-தெலுங்கானா செல்லும் கிரிவலம் வந்த பக்தர்கள் நின்று பயணம் செய்யக்கூட போதிய இடம் இல்லாமல், நெருக்கியடித்துக்கொண்டு அவதியுடன் பயணம் செய்யும் காட்சி.