தவெக-வில் 28 அணிகள் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் குழந்தைகளுக்கும் ஒரு அணி உண்டு.
தமிழக அரசியல் களத்தில் புதிய கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு ஓராண்டை நிறைவுசெய்துள்ளது.
கழகத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, முதல் மாநாடு, கட்சிக் கொடி, கொள்கை, அரசியல் தலைவர்கள், ’ஆட்சியில் அதிகாரத்தில் சமபங்கு’ என ஒரு அதிரடியான என்ட்ரி கொடுத்த விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து கட்சியின் நிர்வாகிகளையும், மாவட்ட பொறுப்பாளர்களையும் நியமித்து கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறார்.
அந்தவகையில் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், ஜெகதீஷ், ராஜ்மோகன், லயோலா மணி உள்ளிட்டோருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது தவெக கட்சி உருவாக்கியுள்ள அணிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி தீவிரமாக கட்சியை தயார்படுத்திவரும் விஜய், தேர்தலை எப்படி அணுக வேண்டும் என்ற அடுத்தகட்ட நடவடிக்கையாக பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த நிலையில் தவெக கட்சியின் 28 அணிகள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தவெகவின் ஐடிவிங் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியிருக்கும் பதிவில், ”தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 28 அணிகள் குறித்த பட்டியல் வெளியீடு. மூன்றாம் பாலினத்தவர், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி, குழந்தைகள் அணி உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன” என்று பதிவிடப்படுள்ளது.