தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோயில் பஞ்ச ரத திருத்தேரோட்ட பெருவிழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர், பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் சிறப்பு ஸ்தலமாகவும், திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில் தைப்பூச பெருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து தினந்தோறும் சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா நடந்து வருகிறது. 10 நாட்கள் நடக்கும் இந்த உற்சவத்தின் பிரதான நிகழ்வான பஞ்சரத திருத்தேரோட்ட பெருவிழா வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது.
சுமார் 500 டன் எடையுள்ள பிரம்மாண்ட தேரில் சிறப்பு மலர் அலங்காரத்தில் மகாலிங்க சுவாமி எழுந்தருள விநாயகர் தேர், முருகன் தேர், பிரகத் சுந்தர குஜாம்பிகை தேர், சண்டிகேஸ்வரர் தேர் என ஐந்து தேர்கள் பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஓதிட ஓதுவா மூர்த்திகள் தேவார திருவாசக பதிகங்களுடன் சிவ வாத்தியங்கள் இசைத்திட இடை மருதா… மகாலிங்கா… என பக்தர்களின் கோஷத்துடன் தேரோட்ட பெருவிழா தொடங்கியது.
நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
திருத்தேரோட்ட பெருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு உள்ளிட்டோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.