நாட்டின் அனைத் பதவிகளிலும் ஆர்எஸ்எஸ் பாஜக காரர்களை ஒன்றிய அரசு நிரப்பிக்கொண்டு இருக்கிறது. இதனால் நாட்டை பேரபாயம் சூழ்ந்துள்ளது என சேலத்தில் திருச்சி சிவா எம்பி பேசினார்.
சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் சேலம் தாதகாப்பட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் ரகுபதி வரவேற்றார். மாநிலங்களவை குழுத் தலைவரும், திமுக கொள்கை பரப்பு செயலாளருமான திருச்சி சிவா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியது:
தமிழ்நாட்டை மோடி அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இந்த கண்டன பொதுக்கூட்டத்தை கண்டு மோடியோ, அமித்ஷாவோ தமிழகத்து தேவையான பட்ஜெட்டை ஒதுக்கிவிடுவார்கள் என்பதற்காக இந்த கண்டன பொதுக்கூட்டத்தை நாங்கள் நடத்தவில்லை.
தமிழக மக்களிடம் ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையை எடுத்துக்கூறி, வருகிற தேர்தலில் பாஜக வை வீட்டிற்கு அனுப்புவதற்காகவே இந்த கண்டன பொதுக்கூட்டம் கூட்டம். திமுக கூட்டம் என்பது மக்களை அரசியல் படுத்துகின்ற மாலை நேர பல்கலைக் கழகம் ஆகும்.
எல்லோருக்கும் எல்லாம் என்பது மாநில அரசின் கொள்கை. ஆர்எஸ்எஸ் பாஜகவுக்கே எல்லாம் என்பது ஒன்றிய அரசின் கொள்கை. நாட்டின் அனைத்து இடங்களிலும் தேர்தல் ஆணையமாக இருக்கட்டும், சிபிஐ, ஈடியாக இருக்கட்டும், ஆளுநர் பதிவிகள் ஆகட்டும் அனைத்து இடங்களிலும் ஆர்எஸ்எஸ் பாஜக காரர்களை நிரப்பிக்கொண்டு வருகிறார்கள். இதை சாதாரணமாக நான் சொல்லவில்லை. நாட்டை பேரபாயம் சூழ்ந்துள்ளது. இவர்களால் எப்போதும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற அபாய எச்சரிக்கையை இங்கு அறிவிப்பு செய்கிறேன். இவர்களை எதிர்த்து கேள்வி கேட்கின்ற கட்சியாக திமுக மட்டுமே இருக்கிறது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் திராவிடத்தின் அடையாளமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். கூட்டாட்சி தத்துவத்தை, கூட்டாட்சி கொள்கையை மதிக்காத ஒன்றிய அரசினை நீதிமன்றங்கள் மூலம் தண்டிக்க முடியாமல் போனாலும் மக்கள் மன்றங்கள் மூலம் தண்டிக்க முடியும் என்பதால் தமிழ்நாட்டு மக்களிடம் பேசுகிறோம். தேர்தலுக்காக மக்களை இப்போதிருந்தே பயிற்று விக்கிறோம். அப்போதுதான் அவர்களை வீட்டிற்கு அனுப்ப முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் திமுக செய்தித் தொடர்பு துறை செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மேயர் ராமச்சந்திரன், திமுக மூத்த நிர்வாகிகள் சுபாசு, கார்த்திகேயன், பகுதி செயலாளர்கள் சரவணன், முருகன், ஜெகதீஸ் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் கொண்டலாம்பட்டி மண்டலக்குழு தலைவர் அசோகன் நன்றி கூறினார்.