கடலூர் மத்திய சிறையில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சிறைச்சாலைகளில் பாகுபாடின்றி அனைத்து கைதிகளுக்கும் சமமான உணவு, உடை, அடிப்படை வசதிகளை வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், கைதிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள் கிடைக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு உறுப்பினர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை சிறைச்சாலைக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
அதனடிப்படையில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு, குடிநீர், கழிப்பறை வசதி மற்றும் பொதுவான அடிப்படை தேவைகள், அவர்களின் வழக்கு சம்மந்தமாக தேவைப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்து அறிக்கை தயாரித்து உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
ஆய்வின் போது மாவட்ட குற்றவியல் நீதிபதி சுபத்ரா தேவி, முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத் துறை பொன்னம்பலம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் விஜயகுமார், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் பொற்கொடி, மாநகராட்சி நகர்நல அலுவலர் எழில் மதனா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வெங்கடேசன், மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.