கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் ஜங்ஷன் சாலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதி வழியாக சிறுவர்கள், படிக்கும் மாணவர்கள் பலர் மோட்டார் சைக்கிள்களை எடுத்துக்கொண்டு அதிவேகமாக சென்றனர்.
இதனை பார்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், அவர்களை நிறுத்தி அவர்களுக்கு 18 வயது நிரம்பி விட்டதா? ஓட்டுனர் உரிமம் உள்ளதா? ஏன் ஹெல்மெட் அணியவில்லை எனக் கேட்டு அறிந்ததுடன், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் களை பறிமுதல் செய்து சிறுவர்கள் மற்றும் மாணவர்களின் தந்தையை அழைத்து வர வேண்டும். இனிமேல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் தலைக்கவசம் அணியாமலும் வாகனங்களை ஓட்டக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தார்.
மேலும் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரிக்கு முன்பு கல்லூரி முடிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மாணவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என சோதனை செய்ததுடன் 18 வயது நிரம்பினால்தான் மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டும். அவசியம் வாகன ஓட்டுனர் உரிமம் எடுக்க வேண்டும்.
தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டக்கூடாது, என ஆலோசனைகள் வழங்கியதுடன் விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்த 20 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசாரின் அதிரடி நடவடிக்கை விருத்தாசலம் நகரப் பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.