தில்லைவிளாகம் கடற்கரையில் பள்ளி மாணவ, மாணவர்களின் நெகிழி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் வனத்துறை சார்பில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியம், திருவாரூர் மாவட்ட நிர்வாகம், பள்ளிகல்வித்துறை, தேசிய பசுமைப்படை, முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், பாலம் சேவை நிறுவனம் இணைந்து தில்லைவிளாகம் கடற்கரை தூய்மை பணி மற்றும் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றியழகன் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், தேசிய பசுமைப்படை திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடனம், பாலம் சேவை நிறுவனச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழிப்புணர்வு பேரணியை சிறப்பு காவல்படை உதவி ஆய்வாளர் சபாபதி தொடக்கிவைத்தார். நெகிழி விழிப்புணர்வின் போது மாணவர்களுக்கு கருத்துரை வழங்கப்பட்டது.
தூய்மைப் பணியில் கடற்கரையில் சேகரிக்கப்பட்ட 2500 கிலோ நெழிகி குப்பைகள் கிழிந்த வலைகள். மரத்துண்டுகள், தெர்மாகோல், பிளாஸ்டிக் பாட்டில்கள்களை தில்லை விளாகம் ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஓவர் சியர் முத்துராஜா, சுகாதார ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி தில்லைவிளாகம், ஊராட்சி செயலர் முருகானந்தம் மற்றும் பள்ளி பசுமைப்படை பொறுப்பாசிரியர்கள், 120 மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை, பாலம் சேவை நிறுவனம் செய்திருந்தது.