திருவாரூரில், மத்திய அரசால் ஓய்வூதியம் ரத்து ஆணை வெளியிடப்பட்ட நாளினை கருப்பு தினமாக அனுசரித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தின் நம்பிக்கையாக இருந்த ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்த அரசாணை வெளியிடப்பட்ட பிப்ரவரி 1ஆம் தேதி நினைவாக, அந்நாளினை கருப்பு தினமாக அறிவித்து கருப்பு பேட்ஜ அணிந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது. தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ஐயப்பன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிர் வலையமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி, மாவட்ட மகளிர் வலையமைப்பு அமைப்பாளர் கிருபாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் குறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஈவேரா, மாவட்டத் தலைவர் முருகேசன், குடவாசல் வட்டாரச் செயலாளர் மணிகண்டன், திருவாரூர் நகரச் செயலாளர் நாகராஜன், நன்னிலம் வட்டாரப் பொருளாளர் மஞ்சுளா, வலங்கைமான் வட்டாரத் தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் உரையாற்றினர். இதில் வட்டாரச் செயலாளர்கள் நன்னிலம் பிரகாஷ், கொரடாச்சேரி சந்திரமோகன், வலங்கைமான் சரவணகுமார், நன்னிலம் வட்டாரத் தலைவர் ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருவாரூர் வட்டாரச் செயலாளர் வேதமூர்த்தி வரவேற்றார். இறுதியில் வட்டாரப் பொருளாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.