‘ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க., போட்டியிடவில்லை என்பது அரசியல் ரீதியாக அ.தி.மு.க., வலுவிழந்து வருவதைக் காட்டுகிறது’ என்று விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:-
வேங்கைவயலை தனித்தீவாக மாற்றி உள்ளனர் போலீசார். தி.மு.க.,வுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கூறுவதில் மட்டுமே அ.தி.மு.க., குறியாக இருக்கிறது. பா.ஜ.க அரசு செய்யும் தவறுகளை அ.தி.மு.க., சுட்டிக்காட்டவில்லை என்பது அதிர்ச்சி தரும் விஷயமாக இருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலிலும் கூட அ.தி.மு.க. போட்டியிடவில்லை. அரசியல் ரீதியாக எந்த அளவிற்கு வலுவிழந்து வருகிறார்கள் என்பதை உறுதிப் படுத்துகிறது.
தி.மு.க., அரசை எதிர்ப்பதை மட்டுமே செயல் திட்டமாக கொண்டிருக்கும் அ.தி.மு.க., தேர்தல் களத்திலும் தங்களது பலத்தை காட்டியிருக்க வேண்டும். வெற்றியோ, தோல்வியோ, இடைத்தேர்தலை சந்தித்து இருக்க வேண்டும். பா.ஜ.கவும், அ.தி.மு.க.வும் ஒருமித்த முடிவை எடுத்து இருக்கிறார்கள்.
இதை வைத்துப்பார்க்கும்போது அவர்கள் வரும் சட்டசபை தேர்தலில் கை கோர்க்கப் போகிறார்கள் என்று தான் தெரிகிறது. ஆதவ் ஆர்ஜூனா மீது நாங்கள் ஒழுங்கு நடவடிக்கையை எடுத்து இருந்தோம். அவர் கட்சியில் இருந்து வெளியேறினார். இப்போது அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றப் போவதாக ஊடகம் மூலம் தகவல் அறிந்தேன். அவருக்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை காரில் துரத்திய சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு திருமாவளவன் அளித்த பதில்:
‘இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஒரு விளக்கம் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் காரில் கட்சிக் கொடி கட்டப்பட்டிருப்பதாலேயே அவர்கள் தி.மு.க.,வினர் என்கிற முடிவுக்கு வந்து விட முடியாது. அதற்கு அந்த கட்சி பொறுப்பாகவும் முடியாது. யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.’ இவ்வாறு அவர் கூறினார்.