பொதுப்பணித்துறை அலட்சியத்தால் வெலிங்டன் ஏரியின் கடைக்கால் மதுகுகளில் இருந்து தண்ணீர் வீணாகி வருகிறது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ள வெலிங்டன் நீர் தேக்கத்தில் இருந்துகடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் இன்று வரை கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்று சேரவில்லை.
கால்வாய்களில் உள்ள அடைப்புகள், தடுப்புகள் ஆகியவைகளே இதற்கு காரணம். அதே நேரத்தில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரை விட அதிக அளவில் ஏரியில் இருந்து வடிகால் பகுதியில் உள்ள மதகுகள் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.
இதனை மணல் மூட்டைகள், சாக்குகள் கொண்டு அடைத்து தண்ணீர் வெளியேறாமல் தடுக்க வேண்டும். செய்யவேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகளோ பொறுப்பற்ற முறையில் இருந்து வருகின்றனர். மேலும் பிரதான பாசன வாய்க்காலில் ஏரியிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கால்வாயின் வட பகுதியில் பாசனத்திற்கு செல்லும் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தண்ணீரை கொண்டு அப்பகுதி விவசாயிகள் நெல் நடவு செய்யவில்லை. காரணம் அப்பகுதி நிலங்களில் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி போன்ற வேளாண்மை பயிர்கள் தற்போது அறுவடை நிலையில் உள்ளதால், தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்தவில்லை. அந்த தண்ணீர் அப்படியே ஏரியின் வடிகால் ஓடைக்கு செல்கிறது.
இந்த தண்ணீர் யாருக்கும் பயன்பாடு இல்லாமல் விரயமாகி வருகிறது. அதே நேரத்தில் வெயில் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு குடிதண்ணீருக்காக மக்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். தண்ணீர் பற்றாக்குறை, மறுபக்கம் மழை கொடுத்த வரம் விரயமாகி வருகிறது.
எனவே வெலிங்டன் ஏரி தண்ணீரை விரயமாக்காமல் பாதுகாப்பான முறையில் விவசாயம் செய்ய பாசனத்திற்கு தண்ணீரை பயன்படுத்தும் வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரிய முறையில் கவனம் செலுத்த வேண்டும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.