கல்வராயன்மலை வாழ் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை கூட்டுறவுத்துறை மூலம் அதிகளவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகில் கூட்டுறவுத் துறையின் சார்பில் பெரும்பலநோக்கு கூட்டுறவு கடன் சங்கம் மூலம் வனப் பொருட்கள் விற்பனை மையம் அமைத்தல் மற்றும் நகர் கூட்டுறவு கடன் சங்கக் கட்டிடத்திற்கு இடம் தேர்வு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கல்வராயன்மலை வாழ் மக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்ய கூட்டுறவுத் துறையின் சார்பில் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன்படி, கூட்டுறவுத் துறையின் பெரும்பலநோக்கு கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் மலைவாழ் பொருட்களான உடலுக்கு நன்மைதரக் கூடிய சாமை, வரகு, தினை, தேன், மிளகு, புளி போன்ற பல்வேறு விளை பொருட்கள் மலைவாழ் விவசாயிகளிடம் பெறப்பட்டு கள்ளக்குறிச்சி, சேராப்பட்டு, மூரார்பாது ஆகிய இடங்களில் கூட்டுறவுத் துறையின் சார்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக உளுந்தூர்பேட்டை வட்டம், செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகில்கூட்டுறவுத் துறையின் சார்பில் பெரும்பலநோக்கு கூட்டுறவு கடன் சங்கம் மூலம் வனப் பொருட்கள் விற்பனை மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இதேபோன்று நகர் கூட்டுறவு கடன் சங்கக் கட்டிடத்திற்கான இடமும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், செங்குறிச்சி பகுதியில் வனப்பொருட்கள் விற்பனை மையம் அமைப்பதன் மூலம் மலைவாழ் விவசாயிகள் உற்பத்திப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்ய வழிவகை ஏற்படும்.
எனவே, விற்பனை மையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் குறிஞ்சிமணவாளன், உளுந்தூர்பேட்டை நகர்மன்ற தலைவர் வைத்தியநாதன், நகர்மன்ற துணைத்தலைவர் திருநாவுக்கரசு, வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.