உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14ம் தேதி முதல் தொடங்கிய கும்பமேளா நிகழ்வு பிப்ரவரி 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகின்றனர்.
இந்த நிலையில், அமாவாசை தினமான நேற்று அதிகாலை 3 மணியளவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
மகா கும்பத்தின் சங்கம் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்ட நெரிசலுக்கான காரணத்தை விசாரிக்க நீதிபதி ஹர்ஷ் குமார், முன்னாள் டிஜி விகே குப்தா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் விகே சிங் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட நீதித்துறை ஆணையத்தை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இது போன்ற ஒரு சோகம் எப்படி நிகழ்ந்தது என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம்,” என்று உணர்ச்சிவசப்பட்ட ஆதித்யநாத், தலைமைச் செயலரும் டிஜிபியும் வருகை தருவார்கள் என்றும் கூறினார்.
இந்த சோகமான சம்பவம் குறித்து விரிவான விசாரணை தொடங்கியுள்ளது.