கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” சிறப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், அரசு அலுவலகங்கள் ஆய்வு மற்றும் மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டம் தேர்வு செய்யப்பட்டு, வருவாய் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கே நேரடியாக சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கல்வராயன்மலை வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்” நடைபெற்றது.
கல்வராயன்மலை வட்டம், வெள்ளிமலை கிராமத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் வெள்ளிமலை மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சங்கத்தின் செயல்பாடுகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடனுதவிகள், அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து முழுவதுமாக கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, கரியாலூர் கிராமத்தில் வெள்ளிமலை பழங்குடியினர் மகளிர் மரம் இல்லா வனப் பொருட்கள் மற்றும் இயற்கை வேளாண் உற்பத்தி நிறுவனத்தின் கட்டிடத்தினை பார்வையிட்டு, கட்டிடத்தின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து, மீண்டும் இக்கட்டிடத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், தாழ்வெள்ளார் – புரசம்பட்டு சாலை அருகில் புதியதாக பூங்கா அமைக்கப்பட உள்ள இடத்தினை பார்வையிட்டு, பூங்கா அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
அடுத்ததாக, கிளாக்காடு மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் (இருப்பு: சேராப்பட்டு) சார்பில் கூட்டுறவு வனப் பொருட்கள் விற்பனையகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் விற்பனை பொருட்களின் இருப்பு, பொருட்கள் கொள்முதல் விவரம், விற்பனை விவரம் உள்ளிட்ட தகவல்கள் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டதுடன், அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், விற்பனை நிலையத்தின் செயல்பாடுகள் ஆகியவையும் ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, சேராப்பட்டு நியாயவிலை விற்பனைக் கடையினை ஆய்வு செய்து, பொருட்களின் இருப்பு, குடும்ப அட்டை எண்ணிக்கை, நியாயவிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட விவரம் ஆகியவை ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மோட்டாம்பட்டி மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் நேரில் ஆய்வு செய்யப்பட்டு, சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது. அரசின் திட்டங்கள் அனைத்தும் பழங்குடியின மக்களுக்கும் சென்று சேருவதை அலுவலர்கள் உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சி.பெ.முருகேசன், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.