தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர்
முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்
பள்ளியில் ஆசிரியராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில், சின்னமனை பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் மதன் (30) .
இவருக்கு பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து ரமணியை பெண் கேட்டு சென்றுள்ளனர். ஆனால் ரமணிக்கு, மதனை
திருமணம் செய்வதில் விருப்பமில்லை என கூறியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மதன் இன்று (நவ.20) காலை ரமணி வகுப்பறையில் பாடம் எடுத்துக்
கொண்டு இருந்த போது, வகுப்பறையில் புகுந்து ரமணி கழுத்து பகுதியில் மதன்
கத்தியால் குத்தினார்
இந்த நிலையில், ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:
’’தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது.
தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்’’. இவ்வாறு அமைச்சர் அன்பில் தெரிவித்துள்ளார்.
தஞ்சை அரசு பள்ளி ஆசிரியர் ரமணி கொலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார் என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இருவருமே கொலை நடந்த மல்லிப்பட்டினம் செல்கின்றனர்.