கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் “அறிவோம் ஆரோக்கியமான சூழலுக்கான உரிமை, நமது பணம் நமது உரிமை, அறிவோம் தேர்வு செய்யும் உரிமை, அறிந்திரு, விழித்திரு செயல்படு, போலியான நிறுவனம் தவிர், நுகர்வோரின் உரிமைக்குஉத்திரவாதம் நுகர்வோர் சட்டம்” என்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி பேருந்து நிலையம் வழியாக கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் லூர்துசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.