பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. இணையதள பக்கம் முழுவதும் இந்தி மொழியில் மாற்றப்படத்ற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்தி திணிப்பு செயலுக்கு எல்.ஐ.சி.-யை ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சுரன்ஸ் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியா (LIC) இணையதள பக்கம் முழுமையாக இந்தி மொழியில் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த மாதம் வரை ஆங்கில மொழியில் இருந்தது, இப்போது இந்தி மொழியில் மாறியிருக்கிறது. மாற்று மொழிகளாக இந்தியும் மராத்தியும் கொடுக்கப்பட்டுள்ளது. மொழியை மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் கூட அதற்கு இந்தி படிக்க தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. காரணம் – மொழி என்பதையும் இந்தி மொழியிலேயே இருக்கிறது.
இந்தி மொழி தெரியாத, புரியாத மக்கள் எல்.ஐ.சி.யின் வலைத்தளத்தை பயன்படுத்த வேண்டாமா, நாடு முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தும் வலைத்தள பக்கம் ஏன் இந்தி மொழியி இருக்கிறது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஆங்கில மொழியை தேர்வு செய்யும் ஆப்சன் கூட இந்தியில் இல்லை; இந்தி திணிப்பிற்கு LIC வலைத்தள பக்கத்தை பயன்படுத்துவதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதவில், “இந்தி திணிப்பிற்கு எல்.ஐ.சி.யின் இணையதளம் ஓர் பிரச்சார கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. பொதுமக்களின் ஆதரவுடன் மட்டும் எல்.ஐ.சி. வளர்ச்சியடைந்தது. இந்தி மொழிக்கு மாற்றி, அவர்களின் பெரும்பான்மையான ஆதரவாளர்களுக்கு எப்படி துரோகம் செய்ய துணிந்திருக்கிறது எல்.ஐ.சி.?” எனக் குறிப்பிட்டுள்ளார்.