திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானையை கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த பாகன் உதயகுமார் கவனித்து வந்தார். உதயகுமாரை காண அவரது உறவினரான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சிசுபாலன் வந்துள்ளார்.சிசுபாலன், யானையின் அருகே நின்று செல்பி எடுத்ததுடன் யானையின் உடலில் தட்டியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக யானை, சிசுபாலனை தும்பிக்கையால் கழுத்தை பிடித்து இறுக்கி தாக்கியுள்ளது. அவரை உதயகுமார் காப்பாற்ற முயன்றுள்ளார்.
அவரை யானை, தும்பிக்கையால் தள்ளி விட்டதில் உதயகுமார் தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் இருவரையும் கால்களால் மிதித்ததில் பலத்த காயமடைந்து மயங்கினர். தகவலறிந்து வந்த பாகன் பணியாளர்கள் உதவியுடன் இருவரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். யானை தாக்கி பாகன், உறவினர் உயிரிழந்த தகவல் திருச்செந்தூர் பகுதியில் காட்டுத்தீயாக பரவியது. இந்த சம்பவத்தை அடுத்து யானையை மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது.இந்நிலையில் யானையை கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் யானை இயல்பு நிலையில் உள்ளது என மண்டல இணை இயக்குநர் தகவல் தெரிவித்தார். மேலும் யானையை திருச்சி, முதுமலை, டாப்ஸ்லிப் ஆகிய 3 யானைகள் மறுவாழ்வு, புத்தாக்க பயிற்சி மையத்திற்கு அனுப்புவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.