தெலங்கானாவில் அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கும் சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணத்தை ரத்து செய்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஹைதராபாத்தை காற்று மாசில்லா நகராக உருவாக்கும் வகையில், புதிய மின்சார வாகன கொள்கையை தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அரசாணை குறித்து தகவல் தெரிவித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர், அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கும் சாலை வரி, பதிவுக் கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். இரு சக்கர வாகனம், கார், வாடகை கார், ஆட்டோ, ட்ராக்டர், பேருந்து உள்ளிட்ட அனைத்து மின்சார வாகனங்களுக்கும் சலுகை பொருந்தும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழில் நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை அழைத்துச் செல்லும் மின்சார பேருந்துகளுக்கும் இந்த சலுகை வழங்கப்பட உள்ளது. உடனடியாக அமலுக்கு வந்துள்ள இந்த சலுகை, 2026 டிசம்பர் 31ம் தேதி வரை 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த 2 ஆண்டுகளில் தெலங்கானாவில் புதிதாக மின்சார வாகனங்கள் வாங்கும் வாடிக்கையளர்களுக்கு அந்த வாகனத்தின் ஆயுட் காலம் முழுவதும் சாலை வரி, பதிவுக் கட்டணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.