மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜி ரத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மருத்துவர் பாலாஜியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. தலைப் பகுதியில் 4 இடங்களில் காயம் உள்ளது. மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மருத்துவரை கத்தியால் குத்தியவர் 6 மாதங்களாக இங்குதான் தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளார். ஆறு மாதங்களாக சிகிச்சையில் இருந்த தாயாருடன் வருபவர் என்பதால் சந்தேகம் எழவில்லை. தனியார் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் சொன்னதை கேட்டு இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
மருத்துவரை தாக்கிய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்; இது வன்மையாக கண்டிக்கத்தக்கது; அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு நேரம், காலம் பார்க்காமல் சிகிச்சை அளித்து வருகின்றனர் மருத்துவர்கள். இந்த செயலை செய்த இளைஞர் மீது கடுமையான குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள அரசு மருத்துவர்களுடன் பிற்பகல் 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும். மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று கூறினார்.