சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள செங்குந்தர் குமரகுரு சுப்ரமணிய சுவாமி கோயிலில், பன்னிரு திருமுறை மன்ற அறக்கட்டளை சார்பில், 11 ஆம் ஆண்டு நாயன்மார் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.இதனை முன்னிட்டு ஐப்பசி 24ம் தேதி காலை விநாயகர், வள்ளி தேவசேனா சுப்ரமணியர், சொக்கநாதர், அங்கயர்கண்ணி உள்ளிட்ட மூலத் திருமேணிகளுக்கு திருமஞ்சனம், அதனை தொடர்ந்து பொள்ளாப்பிள்ளையார், அம்மையப்பர் சேயிடைச் செல்வர், அறுபத்து மூவர் நாயன்மார்கள் உள்ளிட்ட அருட்திருமேனிகளுக்கு பெருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் தங்கமணி ஓதுவார் குழுவினரின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும், பவானி சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளைத் தலைவர் தியாகராசன் அருளுரையும் நடைபெற்றது. பின்னர் பேரொளி வழிவாடு, அன்னம் பாலிப்பு நிகழ்ச்சியும், மாலையில் மிகப்பிரமாண்டமான மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அறுபத்து மூவர் திருவீதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது.
முக்கிய வீதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவீதி உலாவிற்கு தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றத் தலைவர் ஒளியரசு தலைமை வகித்தார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலர்குழு தலைவர் சோமசுந்தரம், செயல் அலுவலர் விமலா, அறங்காவலர்கள் செல்வம், முருகன், அர்ச்சகர்கள் ரமேஷ், குப்புசாமி, திருமுருகன், மக்கள் தொடர்பாளர் செந்தில்நாதன் ஆகியோர் செய்திருந்தனர்.