கள்ளக்குறிச்சியில் தற்காப்பு கலையில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பாராட்டு சான்றிதழ் வங்ழகி கவுரவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் வட்டார அளவில் 9 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு பள்ளியிலும் 60 முதல் 70 வரையிலான வளரிளம் மாணவிகளுக்கு, முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட உடையாள் படை தற்காப்புக் கலை குழுவினரால் பாலியல் சீண்டல் உள்ளிட்ட வன்கொடுமைகளுக்கு எதிரான தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கப்பட்டது.
இதன் நிறைவு விழா, கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், தற்காப்புக் கலை பயிற்சி பெற்ற மாணவிகளைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். முன்னதாக, தற்காப்புக் கலை பயிற்சி பெற்ற மாணவிகளின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை சமூக நலத்துறை மாவட்ட நல அலுவலர் தீபிகா மற்றும் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.