வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் ஆலோசணையின்படி விருத்தாசலம் பூந்தோட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் மருத்துவர் பிரதாப் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருக்கிறதா என பரிசோதனை செய்து சிகிச்சைகள் அளித்தனர். தொடர்ந்து டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர் கூறியதாவது: பருவமழை காலங்களில் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். தங்களது தெரு மற்றும் வீடுகளை சுற்றி தேவையற்ற டயர், உரல், தேங்காய் ஓடுகள் பிளாஸ்டிக் பொருட்களில் மழைநீர் தேங்காத வண்ணம் அப்புறப்படுத்த வேண்டும்.
காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வீதி வீதியாக கொசு புகை மருந்து அடிக்கப்பட்டது.
மங்கலம்பேட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் துளசிதாஸ், நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல், துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், மங்கலம்பேட்டை சுகாதார ஆய்வாளர்கள் முருகவேல், ராஜ்மோகன், சதீஷ்குமார், முல்லைநாதன், பரத் ராஜ்குமார் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் கொண்ட சுகாதார குழுவினர் வீடு வீடாக சென்று, வீட்டில் சேமித்து வைத்துள்ள தண்ணீரில் டெங்கு கொசு புழு உற்பத்தி உள்ளதா என கண்டறிந்து அழித்ததுடன், டெங்கு கொசு புழுக்கள் உருவாகும் பொருட்களை கண்டறிந்து அப்புறப்படுத்தி, பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வீதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.