புதுச்சேரியில் நடந்த பாறை ஓவிய முகாமில் முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை நுண்கலை மாணவர்கள் தத்துரூபமாக வரைந்தனர். இந்திரா காந்தி தேசிய கலை மையமும் புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூடமும் இணைந்து இரண்டு நாள் பாறை ஓவிய முகாம் மற்றும் கண்காட்சியை அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூட வளாகத்தில் நடத்தின. இதில், நுண்கலைத்துறை மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று முன்னோர்கள் பாறைகளில் வரைந்த வாழ்க்கை முறை ஓவியங்களை கண்முன்னே உணர்வுபூர்வமாக வரைந்து கொண்டு வந்தனர்.
தற்கால ஓவியங்களுக்கு முன்பிருந்த நவீன ஓவியங்கள், சிற்றோவியங்கள், குகை ஓவியங்கள், இதற்கெல்லாம் முன்னோடியானது பாறை ஓவியம். குகைகளில் தங்கிய நம் முன்னோர்கள் குகைகளிலும் வெளியே பாறைகளிலும் ஓவியங்களை வரைந்துள்ளனர். குகைகளில் இருட்டாக இருந்ததால் அதிக அளவில் பாறைகளில் ஓவியங்களை வரைந்துள்ளனர். அதில் காணப்பட்ட பண்டைய கலை, பண்பாடு, எழுத்து, வேட்டையாடிய காட்சிகள், வாழ்க்கை முறை, மனிதன் குதிரை மீது சவாரி செய்தல், மயில் பாம்புகள் சண்டையிடுதல், போன்றவற்றை நுண்கலை மாணவர்கள் ஓவியங்களாய் தீட்டினார்கள்..மற்ற ஓவியங்களை விட பாறை ஓவியங்களை வரையும் போது புதுவித வண்ணம் கொண்டு வர முடிகிறது என்றும், அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் என்ன மனநிலையில் இருந்து இருப்பார்கள் என்பதையும் உணர்வது புதிய அனுபவத்தை ஏற்படுத்துவதாக முகாமில் ஓவியம் வரைந்த நுண்கலை மாணவர்கள் தெரிவித்தனர்.