உயிருள்ள வரை காட்பாடி தொகுதிக்காக பாடுபடுவேன் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலையில் முதல்வரின் முகவரி துறையின் கீழ் காட்பாடி சட்டமன்ற தொகுதி மக்களிடம் முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு நலதிட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சுமார் 10 கோடியே 91 லட்சம் மதிப்பிலான நலதிட்டங்களை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், எந்த திட்டம் வந்தாலும் அது காட்பாடி தொகுதியில் வர வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். தமிழக அரசு ஒரு திட்டத்தை அறிவித்தால் அது எப்படி காட்பாடி தொகுதிக்கு கொண்டு போவது என்பதில் தான் நாட்டமாக இருப்பேன். வேறு எந்த தொகுதியிலும் இல்லாத திட்டங்கள் நம் தொகுதியில் நடைபெற்றுக் கொண்டுள்ளது.மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் காட்பாடி பகுதியில் இதுவரை 11 கோடி ரூபாய் அளவிலான திட்டங்களை வழங்கியுள்ளோம். காட்பாடி தொகுதியில் எந்தெந்த பள்ளிகளில் கட்டிடங்கள் இல்லையோ அனைத்திற்கும் இந்த ஆண்டிற்குள் கட்டிடங்கள் கட்டித் தரப்படும்.
சட்டசபையில் கலைஞர் அவர்கள் 56 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாகவும் அமைச்சராகவும் இருந்துள்ளார். அவரை அடுத்து 53 ஆண்டுகள் நான் சட்ட சபையில் உட்கார்ந்து இருக்கிறேன் என்றால் அது என் காட்பாடி மக்கள் தந்தது. இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்துள்ள மக்களுக்கு உயிருள்ளவரை பாடுபடுவேன் என்றார். பின்னர் தமிழக ஆளுநர் விழா ஒன்றுக்கு இந்தியில் வாழ்த்து தெரிவித்திருப்பது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, இதன் மூலம் அவர் யார் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என துறைமுருகன் தெரிவித்தார்.
தாமரையைப் பார்த்து அஞ்சும் நிலை வரும் என தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, அது குறித்து பதில் அளிக்காமல் துரைமுருகன் சென்று விட்டார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, காட்பாடி ஒன்றிய பெருங்குழு தலைவர் வேல்முருகன், வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.