வட தமிழகத்தில் சுமார் அரை நூற்றாண்டு காலத்திற்கு மேல் குறிப்பிட்ட இரு சமுதாயத்திற்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி பல்வேறு கலவர சம்பவங்கள் நடந்தேறி இருக்கிறது. சமூக வளர்ச்சி மற்றும் கல்வி வளர்ச்சியின் மூலம் சாதிய பாகுபாடுகள் குறைந்த நிலையில் அது மீண்டும், மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருவது தான் கவலை அளிப்பதாக இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் தனிப்பட்ட சிலரால் நடைபெற்ற விரும்பத்தகாத சில செயல்களாலும் அதை தொடர்ந்து சமுதாய தலைவர்கள் கலந்து கொண்ட பொதுவெளி நிகழ்ச்சிகளின் பேச்சுக்களும் இரு சமுதாயத்தினர் இடையே மீண்டும் மோதலை அதிகப்படுத்தி இருக்கிறது.
ஆம் தனிப்பட்ட சிலர் செய்த தவறுகளால் இரண்டு சமுதாயத்தினர் முட்டி மோதிக் கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஒரு கண்டன கூட்டத்தில் அக்கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் வன்னியர் சங்க தலைவரை கொலை செய்து விடுவதாக பொதுவெளியில் பேச போக அந்த வீடியோ வைரல் ஆகி வன்னியர் சங்கத்தினரும் அதோடு இணைந்து பாமகவினரும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து இரண்டு தரப்பிலும் மாறி மாறி வழக்குகள் பதிவாகி கடலூர் மாவட்டமே பதட்டமாக இருக்கிறது.
இந்த விவகாரத்தில் அரசியல் நிலைப்பாட்டை தாண்டி சமுதாய ரீதியாக பலரும் அணுகி வருவதால் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டிருப்பது கவலை அளிக்கிறது.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளரிடம் பேசி உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இரண்டு சமுதாய தரப்பு தலைவர்களும் அமர்ந்து பேசி இரு சமுதாயத்திற்குள் இருக்கும் பிரச்சினைகளை முடித்து வைப்பது அவசியம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆம் வேல்முருகன் கருத்தை இரண்டு சமூக தலைவர்களும் உடனடியாக செயல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். ஏனெனில் இரண்டு சமுதாய தரப்பிலும் மாவட்டம் முழுவதும் மாறி மாறி வழக்குகள் பதிவாகி வரும் நிலையில் அந்த வழக்குகளில் படித்து முடித்து வேலைக்கு செல்ல தயாராகி வரும் பெரும்பாலான இளைஞர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டிருக்கிறது. அந்த வழக்குகளால் அந்த இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு அந்த குடும்பத்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி வருவதுதான் அந்த மாவட்டத்தின் நீண்ட நாள் பிரச்சனையாக இருந்து வருகிறது.
இதற்கு முன் நடைபெற்ற சம்பவங்களில் வழக்கு மற்றும் கலவரங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அதிலிருந்து இன்னமும் மீண்டு வர முடியாமல் சொல்லொன்னா துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர் இரண்டு தரப்பு சமுதாய தலைவர்களும் ஒன்றிணைந்து அந்தந்த சமுதாய மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றவும் அவர்களின் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வந்து மாநிலத்தில் அமைதி நிலவ செய்வது அவர்களின் முக்கிய கடமை இனியும் காலம் கடத்தாமல் இரு சமுதாய தலைவர்களும் கூடி பேசி இந்த மக்களின் எதிர்கால வாழ்க்கையை அமைதியாகவும் ஒற்றுமை உணர்வுடன் அமைய பணியாற்றிட வேண்டியது அவசியம்.