கும்மிடிப்பூண்டியில் நாளை சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உள்ளதாக ஒலிபெருக்கி மூலம் நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் சுமார் 15 வார்டுகளில் 20 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி பஜார் பகுதிக்கு ஆத்துப்பக்கம், வழுதலம்பேடு, பெத்திக்குப்பம், எளாவூர், மங்காவரம், சின்ன நத்தம், மாதர்பாக்கம், பூவாலம்பேடு, ஆரம்பாக்கம், நேமலூர் உள்ளிட்ட 61 ஊராட்சிகளை சேர்ந்த கிராமப்புற மக்கள் தங்களுக்கு அடிப்படை தேவைகளுக்காக பொருட்கள் வாங்க வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, மின்வாரிய அலுவலகம், வங்கி, காவல் நிலையம், டி.எஸ்.பி அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலம் ஆகிய இடங்களுக்கு பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தினந்தோறும் கும்மிடிபூண்டி பேரூராட்சிக்குட்பட்ட ஜிஎன்டி சாலை வழியாகத்தான் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் சென்று வருவது வழக்கம். ஆனால் ஜிஎன்டி சாலை இருபுறமும் உள்ள நடைபாதைக் கடைகள், ஆக்கிரமிப்பு ஷட்டர் போட்ட கடைகள் உள்ளிட்ட கடைகளால் இட நெருக்கடி காரணமாக மக்கள் வந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதேபோல் 108 ஆம்புலன்ஸ், அரசு பேருந்துகள் கும்மிடிப்பூண்டி பஜார் வழியாக செல்லாமல் கும்மிடிப்பூண்டி பைபாஸ் வழியாக செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும் திருப்பதி கோயிலுக்கு செல்ல முடியாமலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது சம்பந்தமாக ஏற்கனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பலமுறை ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும், மீண்டும் மீண்டும் நடைப்பாதைக் கடைகள் உருவாகி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. இந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகம் பலமுறை நடைபாதைக் கடைகள் உள்ள இடத்தை சுத்தம் செய்து எல்லைக்கோடு அமைத்தும் கயிறுகள் கட்டியும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆனால் மீண்டும் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்ததால், தீபாவளி நாளின் போதும் கடும் நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நாளை(09-ஆம் தேதி) ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற போவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து வியாபாரி சங்கம் மற்றும் நடைபாதை வியாபாரி சங்கங்கள் சார்பில் டி.எஸ்.பி. அண்ணாதுரை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.
ஏற்கனவே நடைபாதை கடை அடையாள அட்டை உள்ளவர்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பின்பு சிறிது இடம் கொடுக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே ஆக்கிரமித்துள்ள கடைகளை ஒரு சிலர் அகற்றி வருகின்றனர். இந்த கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், பேருராட்சி எழுத்தர் ரவி, கவுன்சிலர் அப்துல் கறீம், நடைபாதை சங்க தலைவர் குப்பன் கலந்து கொண்டனர்.