ஆரணி அருகே கோவில் நிலத்தை மீட்டுத்தரக்கோரி கிராம மக்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முனுகப்பட்டு கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நீலகண்ட சுவாமி மடம் உள்ளது. இந்த மடத்திற்கு முனுகப்பட்டு, பெங்களூர் போன்ற பகுதிகளில் சொத்துக்கள் உள்ளன. இந்த நிலத்தை இந்து அறநிலையத்துறை சார்பில் குத்தகை விட்டு வசூல் செய்வது வழக்கமாகும்.
அதேபோல் கடந்த 2000-ம் ஆண்டு நீலகண்ட சுவாமி மடத்திற்கு சொந்தமான 2.28 ஏக்கர் நிலத்தை தமிழக இந்து அறநிலைத்துறை சார்பில் 1,100 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான தேவராஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து தேக்கு மரம் மற்றும் விவசாயம் செய்து வந்துள்ளார். மேலும் தேவராஜ் கடந்த 2000-ம் ஆண்டில் குத்தகை எடுத்து 24 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் குத்தகை பணம் செலுத்தாமலும், பலமுறை இந்து அறநிலையத்துறை சார்பில் அந்த இடத்தை காலி செய்யக் கூறியும் அதனை ஆக்கிரமித்து வந்துள்ளார்.
இது சம்மந்தமாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தேவராஜுக்கு முறைப்படி குத்தகை இடத்தை காலி செய்யக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் தேவராஜ் குத்தகை இடத்தை காலி செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் கிராம மக்கள் பெரணமல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் நீலகண்ட சுவாமி மடத்திற்கு முன்பு அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.