பெருநகர சென்னை மாநகராட்சி 31வது வார்டில் ரூ. 8.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா திறந்து வைக்கப்பட்டது. மாதவரம் மண்டலம் பெருநகர சென்னை மாநகராட்சி 31வது வார்டுக்குட்பட்ட கதிர்வேடு கண்ணகி தெருவில் உள்ள மாநகராட்சி பூங்கா பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்தது.
இதனால் கண்ணகி தெரு, என்எஸ்கே தெரு, காந்தி தெரு, சிவராஜ் தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு. பஜனை கோயில் தெரு, ஜான் விக்டர் தெரு ஆகிய பகுதி பொதுமக்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ள பூங்காவை சீர்படுத்த வேண்டுமென்று வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபுவை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாதவரம் மண்டலம் மாநகராட்சி சார்பில் கண்ணகி தெருவில் உள்ள பூங்கா ரூ. 8 இலட்சத்து 50 ஆயிரம் செல்வில் புதுப்பிக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவும், பூங்காவில் நீரூற்று பணிக்காக பூமி பூஜையும் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாதவரம் மண்டல உதவி செயற்பொறியாளர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார்.
பெருநகர சென்னை மாநகராட்சி 31வது வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, ரூ. 8.50 இலட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, பூங்காவில் நீரூற்று பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வார்டு உதவி பொறியாளர் லோகேஷ், திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கதிர்வேடு பாபு, காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.