ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் ஒருவழியாக நடந்து முடிந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலைபோல் உலக அளவில் எதிர்பார்க்கப்படகூடிய தேர்தல் வேறு எதுவும் இல்லை எனலாம். காரணம் அமெரிக்காத்தான் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி கடை முதலாளியாக இருந்து வருகிறது. அத்துடன் உலகின் பெரும்பாலான நாடுகள் தங்களிடையேயான வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலர்களை நம்பி இருக்கின்றன. அதனால் நேரடியாகவோ. மறைமுகமாகவோ அமெரிக்க அரசியலில் ஏற்படும் எந்த மாற்றமும் உலகத்தை நேரடியாக பாதிக்கக்கூடியது.

மற்ற நாடுகளுக்கும் அமெரிக்கவுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசமே அந்நாடு இரு கட்சி ஆட்சி முறை அமலில் உள்ள நாடு என்பதுதான். 30க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் அந்நாட்டில் இருந்தாலும், முக்கிய கட்சிகள் என்பது குடியரசு கட்சி அல்லது ஜனநாயக கட்சி ஆகிய இரண்டு மட்டுமே. இந்த இரு கட்சிகளில் ஒன்றுதான் வெற்றி பெற்று, அதன் வேட்பாளர் அதிபராக அமர்வார். அந்த கட்சியின் வெளியுறவு கொள்கைதான் அந்நாட்டின் அடுத்த 4 ஆண்டுகால ஆட்சி செல்லும் திசையை தீர்மானிக்கும்.
இந்த இரு கட்சிகளில் குடியரசுக்கட்சி வெளிப்படையான இந்திய ஆதரவு நிலைப்பாடுக்கொண்டது. ஜனநயாக கட்சி இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்டது. இதனால் ஜனநாயக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் தருணங்களில் அமெரிக்கா ஆதரவு பாகிஸ்தான் பக்கம் சாய்வதும், அந்த காலகட்டங்களில் இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கை அதிகரிப்பதும், உலகம் பலமுறை கண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும். குடியரசு கட்சி சார்பில் டெனால்ட் டிரம்பும் போட்டியிட்டனர். கமலா ஹாரிஸ் அமெரிக்கவாழ் இந்தியர் என்று சொன்னாலும், அவர் கட்சி மட்டுமல்லாமல் அவரும் இந்திய எதிர்ப்பு மனநிலை கொண்டவர்தான். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அதிபராகியுள்ளார் என்று வேண்டுமானால் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாமே தவிர, இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுதான் அமெரிக்காவின் செயல்பாடாக இருக்கும். அதே சமயம் டெனால்ட் டிரம்ப் இந்திய ஆதரவாளர் என்பது மட்டுல்லாமல், தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியின் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர். இதை அவரே வெளிப்படையாக தெரிவித்துள்ளார். எனவே டிரம்ப் அமெரிக்க அதிபராக வருவதுதான் இந்தியாவிற்கு நலன் பயக்கும் என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி இருந்தது.
கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றிருந்தால் அமெரிக்காவுடன் நல்லுறவுகளை தக்க வைத்துக்கொள்ளவே இந்தியா கடும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியிருந்திருக்கும். ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் கை ஓங்கியது இந்தியாவிற்கு நல்லதே என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். டிரம்ப் அதிபரானதால் தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளிலும் அமெரிக்காவின் ஆதரவு இந்தியாவிற்கு இருக்கும். மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் டிரம்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.