திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளில் மீண்டும் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழகத்தில் மரக்காணம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி பலரும் உயிரிழந்த நிலையில் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை தடுக்கப்பட வேண்டும் என காவல்துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டு தீவிர சோதனை நடத்தி கள்ளச்சாராய விற்பனையை கட்டுக்குள் வைத்திருந்த நிலையில், செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் தற்பொழுது கள்ளச்சாராயம் விற்பனை மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு, சென்னசமுத்திரம், பரமனந்தல் குப்பநத்தம் உள்ளிட்ட ஊராட்சிகள் வனப்பகுதி ஒட்டி உள்ள பகுதியாக உள்ளதால் மலைப்பகுதிகளில் காய்ச்சி அதனை மலை அடிவாரத்தில் கொண்டு வந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களிடம் வாங்கி கள்ளத்தனமாக விற்பனைக்கு வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. அதேபோன்று அரட்டவாடி தாழையுத்து தரைக்காடு ஒட்டி உள்ள வனப்பகுதிகளிலும் பல்வேறு கிராமப்புற பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி அதனை விற்பனை செய்து வருகின்றனர். குறைந்த விலைக்கு கிடைப்பதால் மதுப்பிரியர்கள் கள்ளச்சாராயத்தின் பாதிப்புகளை உணராமல் பாக்கெட் பாக்கெட்டாக வாங்கி வந்து அருந்தி போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.
கள்ளச்சாராயத்தினால் மீண்டும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பே மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக செங்கம் நகரப் பகுதிகளில் இரவு முழுவதும் மது பாட்டில் மற்றும் கள்ளச்சாராயம் என இரண்டுமே விற்கப்பட்டு வருவதாகவும், காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து அப்பாவி பொதுமக்கள் உயிரை பாதுகாத்திட வேண்டும் என சமூக அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.