தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு கோரி செவிலியர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் செவிலியர் எஸ் .சாந்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நேற்று முன்தினம் மாலை திருச்சியில் பணிமுடித்து வீட்டிற்கு சென்ற செவிலியர் மீது நடந்த கொலைவெறி தாக்குதலுக்கு கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணி செய்யும் செவிலியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிடவும், மேலும் காவல் பணிக்கு தகுதியான இரவு காவலர்கள் நியமிக்கவும் வலியுறுத்தப்பட்டது. டிஎன்ஜிஇஏ மாவட்ட தலைவர் செந்தில்குமார் துவக்க உரையாற்றி கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். செவிலியர் ரஷ்யா கோரிக்கை விளக்க உரை வழங்கினார்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் ரமேஷ், அரசு ஊழியர் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்வாணன், தமிழ்நாடு வனத்துறை பணியாளர் சங்க மாநில செயலாளர் தமிழ்மாறன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருச்சி மாவட்ட செயலாளர் பாபு, தஞ்சை தெற்கு வட்ட செயலாளர் ராகவேந்திர பிரவீன், தமிழ்நாடு வனத்துறை பணியாளர் சங்க மாநில செயலாளர் தமிழ்மாறன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கும்பகோணம் வட்டச் செயலாளர் பிரபாகரன், தமிழ்நாடுசாலை ஆய்வாளர் சங்கம் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு உயர் சங்க பூதலூர் வட்டச் செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட துறை வாரி சங்கங்களின் தோழர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் கோதண்டபாணி நிறைவுரையாற்றினார். தனஆரோக்கியமேரி நன்றியுரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு வழங்கவும், இரவு காவலர் நியமிக்கவும் வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கப்பட்டது.