தீபாவளி பண்டிகை என்றாலே பல படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடமும் பல திரைப்படங்கள் வெளியானது. தமிழில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, கவின் ஆகியோர் நடித்துள்ள படங்கள் வெளியாக, தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் அம்மொழிகளின் முக்கிய ஹீரோக்கள் நடித்துள்ள படங்கள் வெளியாகிறது. இந்த ரேஸில் வெற்றி பெற்ற படங்களை காண்போம்.

ப்ளடி பெக்கர்
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் வெளியாகியுள்ள முதல் படம் ப்ளடி பெக்கர். இந்தப் படத்தினை நெல்சன் திலீப்குமாரிடம் நீண்டகாலமாக உதவி இயக்குநராக பணியாற்றிய சிவபாலன் முத்துகுமார் ப்ளடி பெக்கர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார். படத்தில் கவின் பிச்சைக்காரராக நடித்துள்ளார். உடல் மொழி, வசன உச்சரிப்பு, முக பாவணை என அனைத்திலும் ஸ்கோர் செய்துவிட்டார் கவின்.இருந்தும் கலவையான விமர்சனங்களை தான் இப்படம் பெற்றது பாக்ஸ் ஆபீஸிலும் படம் பெரிதாக ஜொலிக்கவில்லை என்பதே நிஜம்.

பிரதர்
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் என காமெடி ஜானரில் படங்கள் இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ராஜேஷ். அடுத்தடுத்து அவர் இயக்கிய படங்கள் சரியாக போகாத நிலையில் புதியதாக தற்போது ஜெயம் ரவியை வைத்து பிரதர் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை. பல புதிய படங்களுக்கு இடையில் இப்படமும் கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியாகி இருந்தது. முதல் நாளில் ரூ. 2.5 கோடியும், இரண்டாம் நாளில் ரூ. 2.2 கோடியும் வசூல் ஆகியிருந்தது. மூன்றாம் நாளான சனிக் கிழமை முற்றிலும் சரிந்து ரூ. 1.9 கோடியும் வசூல் ஆனது. நான்காவது நாளான நேற்று ஓட்டுமொத்தமாகவே வெறும் ரூ.ஒரு கோடி மட்டுமே வசூல் ஆகியுள்ளது. இன்னும் படத்தின் அதிகாரப்பூர்வமான வசூல் குறித்து படக்குழு எதுவும் தெரிவிக்கவில்லை. வார இறுதி நாளிலேயே படத்தின் வசூல் இந்த அளவிற்கு குறைந்துள்ளதால், படக்குழு வருத்தத்தில் உள்ளது.

லக்கி பாஸ்கர்
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்த படம் தான் லக்கி பாஸ்கர். வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி, ராம்கி ஆகியோர் நடித்திருந்தனர்.மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

அமரன்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அமரன்’. சோனி நிறுவனம், கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது.
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை இயக்கி இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.
தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி இருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற ‘அமரன்’ தற்போது வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அமரன் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.42.3 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், இப்படம் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி உலகளவில் ரூ. 150 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கபடுகிறது. ரஜினி விஜய் அஜித் இவர்களுக்கு பிறகு மூன்றே நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த ஒரே நபர் சிவகார்த்திகேயன் தான். இவரை தற்போது கோலிவுட்டின் புதிய வசூல் சக்கரவர்த்தி என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்