தமிழக முழுவதுமே மாநாட்டை பற்றியும் அதன் ஏற்பாடுகள் பற்றியும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவலோடு ஆப்பக்கடைக்கு வந்தான் பெருமாள்.ஆமாம் தம்பி நடிகர் விஜய் புதிதாக ஆரம்பிச்ச தமிழக வெற்றிக்கழக மாநாட்டை தானே சொல்ல வருகிறாய் என்று கேட்டார் மேஸ்திரி.ஆமாம் அண்ணா ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த மாநாட்டுப் பணிகள் இறுதிக் கட்டத்தில் மிக பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அனைவருமே ஆச்சரியப்பட்டு போயிருக்கின்றனர். மாநாட்டிற்கு எப்படியும் ஒரு லட்சம் பேர் வரை வரக்கூடும் என்ற ஒரு கணக்கு காவல்துறை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் மாநாட்டில் ஐம்பதாயிரம் பேர் அமர்வதற்கான வசதிகள் தான் செய்யப்பட்டு இருக்கிறது.
இருப்பினும் மாநாட்டில் எந்த சிக்கலும் இல்லாமல் நடைபெறுவதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளையும் விஜய் தரப்பில் இருந்து செய்யப்பட்டிருக்கிறது. அதோடு மாநாட்டிற்கு வருகின்ற ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்டிருக்கும் விஜய் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை தவிர்க்குமாறும் அறிவுறுத்தி இருக்கிறார்.மாநாட்டில் குறைந்தது ஒன்னரை மணி நேரம் விஜயின் பேச்சு இருக்கலாம் என்று அக்கட்சியினர் மத்தியில் கூறப்படுகிறது என்றான் பெருமாள்.
ஆமாம் தம்பி மாநாடு திடலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு பெண் தலைவர்களின் கட்டவுட்களை பற்றி கொஞ்சம் விரிவான தகவலை சொல்லு கேட்போம் என்றார் கோவிந்தசாமி.
அதுவா அண்ணே தென் மாவட்டத்தில் ஜான்சி ராணி என்று அழைக்கப்படுபவர் வேலு நாச்சியார் சுதந்திரப் போராட்டத் வீரரான அவர் வீரத்துடன் வெள்ளையர்களை எதிர்கொண்ட வரலாறு உண்டு. 2014 ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் சிவகங்கையில் அவருக்கு நினைவு மண்டபம் கூட கட்டப்பட்டது.
அதேபோல கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாவின் கட்டவுட் வைக்கப்பட்டிருக்கிறது. இவரும் தீவிரமான சுதந்திரப் போராட்ட வீரர் வெள்ளையர் ஆட்சியில் பலமுறை சிறைக்கு சென்றிருந்த அவரை காந்தியடிகள் தமிழகம் வந்த போதெல்லாம் அவரை சந்தித்தார் என்ற ஒரு வரலாற்று தகவலும் இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் கடலூரில் அஞ்சலை அம்மாவிற்கு சிலை அமைக்கப்பட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அந்த சிலையை திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விஜய்க்கு வடக்கு பக்கமாக அஞ்சலை அம்மா கட்டவுட் தெற்கு பக்கமாக வேலுநாச்சியார் கட்டவுட்டும் செண்டிமெண்டாக வைக்கப்பட்டிருக்கிறது. அதோடு பெரியார், காமராஜர், அம்பேத்கர் கட்டவுட்கள் வைக்கப்பட்டு இருப்பது பற்றி ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் வெளிப்படையாகவே பேசி இருந்தார் விஜய். அதாவது காமராஜர், அம்பேத்கரின், பெரியாரைப் பற்றி எல்லாம் மாணவர்கள் படிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அந்த வகையில் இந்த கட்டவுட்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அதே வேளையில் பேரறிஞர் அண்ணா படம் வைக்கப்படவில்லை என்பது குறித்து அரசியல் அரங்கில் சில விவாதங்களும் எழ தொடங்கி இருக்கிறது. அதைப்பற்றி செய்தியாளர்கள் திமுக அதிமுக தரப்பினரிடம் கேட்ட பொழுது இருவருமே அண்ணாவின் படம் வைப்பது விஜயின் சொந்த விஷயம் என நழுவிக்கொண்டனர். இது ஒரு புறம் இருக்க மாநாட்டு திடல் அருகே சினிமா நடிகர்கள் பயன்படுத்தும் கேரவான் வண்டிகள் பல நிறுத்தப்பட்டு இருக்கிறது. அது பற்றி விசாரித்தால் தமிழ் திரைப்பட நடிகர்கள் பலர் மாநாட்டிற்கு வர இருப்பதாக கட்சியினர் சொல்கிறார்கள் என்றான் பெருமாள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசி வந்த நிலையில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை அவர் இல்லத்தில் சந்தித்து இருக்கிறார்கள் அது பற்றி ஏதாவது தகவல் உண்டா என்றார் மேஸ்திரி கண்டிப்பா இருக்கு அண்ணே!
சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனை உட்பட பல்வேறு பிரச்சனைகளில் ஆளுங்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேசி வந்திருந்தனர். அதை வைத்து கூட்டணியில் விரிசல் என்று எடப்பாடி பழனிச்சாமி போகும் இடமெல்லாம் பேட்டி கொடுக்க பதிலுக்கு முதலமைச்சரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலளிக்கும் வகையில் பழனிச்சாமி ஜோசியரா? என்றெல்லாம் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில்தான் அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசி இருக்கின்றனர். இந்த சந்திப்பின்போது திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மூத்த அமைச்சருமான எ.வ.வேலு உடன் இருந்திருக்கிறார் என்றான் பெருமாள்.